திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம்: சிறுபான்மையினரின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டால் நடவடிக்கை


திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம்: சிறுபான்மையினரின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டால் நடவடிக்கை
x
தினத்தந்தி 29 July 2021 11:58 AM IST (Updated: 29 July 2021 11:58 AM IST)
t-max-icont-min-icon

சிறுபான்மையின மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுத்து மீட்கப்படும் என்று தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தை துவக்கி வைத்து அவர் கூறியதாவது:-

தமிழக அரசின் வரலாற்றிலேயே முதன்முறையாக சிறுபான்மையினர் நலத்துறை என்ற புதிய அமைச்சகத்தை தமிழக முதல்-அமைச்சர் உருவாக்கியுள்ளார். இந்த புதிய அமைச்சகத்தை உருவாக்கியதுடன் துறை அமைச்சருடன் கலந்து ஆலோசித்து முதல்-அமைச்சர் பல புதிய திட்டங்களை ஏற்பாடு செய்துள் ளார். விரைவில் அவர் நிதி நிலை அறிக்கையில் திட்டங்களை அறிவிப்பார்.

கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் சிறுபான்மையின மக்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்தக்கூடிய திட்டங்களும், கடனுதவி திட்டங்களும் முழுமையாக கொண்டு சேர்க்கப்படவில்லை என்பதை ஆய்வின் மூலம் தெரிந்து கொண்டோம்.

ஆக்கிரமிப்பு அகற்றம்

இந்த ஆண்டு முதல் அனைத்து திட்டங்களும் முழு முயற்சியுடன் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களுக்கு சென்றடையும் வண்ணம் திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த ஆய்வுக் கூட்டம் துவங்கப்பட்டுள்ளது.

சிறுபான்மையினர் சமூகத்தை சேர்ந்தவர்களின் கல்லறைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. சட்டத்திற்கு புறம்பாக நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து உள்ளவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வெளியேற்றப்படுவார்கள்.

இந்து சமய அறநிலையத்துறை வாயிலாக இரண்டு மாதத்திற்குள்ளாக ரூ.600 கோடி மதிப்பிலான அரசு நிலங்களை கையகப்படுத்தியுள்ளது. அதேபோல சிறுபான்மை இன மக்களின் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு மீட்கப்பட்டும் என தெரிவித்தார்.

நலத்திட்ட உதவிகள்

இக்கூட்டத்தில் மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் செயலர் துரைரவிச்சந்திரன், மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத் தலைவர் டாக்டர் மஸ்தான், மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள் வி.ஜி. ராஜேந்திரன், சுதர்சனம், கோவிந்தராஜன், துரைசந்திரசேகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மதுசூதனன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

அதை தொடர்ந்து மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் 32 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 79 ஆயிரத்து 442 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Next Story