சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை பெற்றுத்தரக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை பெற்றுத்தரக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 July 2021 6:57 PM IST (Updated: 29 July 2021 6:57 PM IST)
t-max-icont-min-icon

தனியார் சர்க்கரை ஆலை வழங்கவேண்டிய ரூ.26 கோடி நிலுவைத்தொகையை மாவட்ட நிர்வாகம் பெற்றுத்தரக்கோரி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலை

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தனியார் சர்க்கரை ஆலைகள் வழங்கவேண்டிய நிலுவைத் தொகையை மாவட்ட நிர்வாகம் பெற்றுத் தரக்கோரி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் கையில் கரும்பு ஏந்திய படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு போளூர் தனியார் சக்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர்கள் பெருமாள், வேல்மாறன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி உரையாற்றினர். 

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த சுப்பிரமணி, வெங்கடேசன், உதயகுமார் மற்றும் கரும்பு விவசாயிகள் மணி, செல்வன், பலராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

பெற்றுத்தர வேண்டும்

கரும்பு விவசாயிகள் கூறுகையில், போளூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு போளூர், தேவிகாபுரம், பேட்டை உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் கரும்புகளை அரவைக்கு கொடுப்பது வழக்கம். அவ்வாறு விவசாயிகள் வழங்கும் கரும்புகளுக்கு தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் கடந்த சில வருடங்களாக பணம் கொடுக்காமல் விவசாயிகளுக்கு சுமார் ரூ.26 கோடி நிலுவை வைத்துள்ளது. மாவட்ட நிர்வாகம் விவசாயிகளை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
2018-19-ம் ஆண்டிற்கான கரும்பு பணம் ரூ.26 கோடியை உடனடியாக கரும்பு விவசாயிகளுக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் தனியார் சர்க்கரை ஆலை முதலாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக பணத்தை பெற்றுத் தர வேண்டும். இல்லையென்றால் தனியார் சர்க்கரை ஆலை முதலாளிகளின் வீடுகளின் முன்பாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர்.

Next Story