போடியில் கோவிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம் போலீசார் குவிப்பு
போடியில் கோவிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
போடி:
போடி சுப்புராஜ் நகர் புது காலனி பகுதியில் சாலையின் ஓரத்தில் கடந்த 30 ஆண்டுக்கும் மேலாக வீரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அப்பகுதியில் உள்ள பெண்கள் பொங்கல் வைத்து சிறப்புபூஜை செய்து வந்தனர்.
இந்த கோவில் தனது வீட்டுக்கு அருகே இடையூறாக இருப்பதாக கூறி மதுரை ஐகோர்ட்டு கிளையில் தனிநபர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இதைத்தொடர்ந்து கோவிலை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பேரில் ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிலை அகற்ற நகராட்சி ஊழியர்கள் சென்றனர். அப்போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் 10 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது.
முற்றுகை போராட்டம்
இந்நிலையில் அவகாசம் முடிந்ததும் நேற்று போடி நகராட்சி கமிஷனர் ஷகிலா, போடி தாசில்தார் செந்தில் முருகன், போடி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) முத்துக்குமார் ஆகியோர் தலைமையில் போடி நகர் போலீசார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரத்துடன் வீரகாளியம்மன் கோவிலை அகற்றுவதற்கு சென்றனர். இதற்கு அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்களும், ஆண்களும் திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கோவிலை முற்றுகையிட்டு இடிக்கக்கூடாது என போராட்டம் நடத்தினர். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
பின்னர் பொதுமக்கள் மற்றும் வீட்டு உரிமையாளரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் 2 மாதத்தில் கோவிலை அகற்றி வேறு இடத்தில் அமைப்பது எனவும், அதுவரை கோவிலை அகற்ற கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டது. பொதுமக்களின் முற்றுகை போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story