கோவேக்சின் 2-வது தவணை செலுத்திக்கொள்ள மருத்துவமனையில் குவிந்த கிராம மக்கள் 200 தடுப்பூசிக்கு 500 பேர் வந்ததால் டோக்கன் வினியோகம்


கோவேக்சின் 2-வது தவணை செலுத்திக்கொள்ள மருத்துவமனையில் குவிந்த கிராம மக்கள்  200 தடுப்பூசிக்கு 500 பேர் வந்ததால் டோக்கன் வினியோகம்
x
தினத்தந்தி 29 July 2021 3:01 PM GMT (Updated: 29 July 2021 3:01 PM GMT)

கோவேக்சின் 2-வது தவணை செலுத்திக்கொள்ள மருத்துவமனையில் கிராம மக்கள் குவிந்தனர். 200 தடுப்பூசிக்கு 500 பேர் வந்ததால் டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது.

ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளான பிச்சம்பட்டி, கொத்தபட்டி, ராஜதானி, தெப்பம்பட்டி, பாலக்கோம்பை, கதிர்நரசிங்கபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட மக்கள் கடந்த மாதம் ராஜதானி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் கோவேக்சின் முதல்தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டனர். பின்னர் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்துவதற்கான 28 நாட்கள் காலஅவகாசம் முடிந்த பின்னும், கோவேக்சின் தடுப்பூசி வரவில்லை. இதனால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியாமல் பொதுமக்கள் தவித்தனர். 
இந்நிலையில் கடந்த 40 நாட்களுக்கு பின்னர் ராஜதானி அரசு ஆரம்ப சுகாதாரநிலைய மருத்துவமனைக்கு நேற்று 200 டோஸ் கோவேக்சின் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து மருத்துவமனைக்கு காலை 8 மணி முதலே 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வரிசையில் காத்திருந்தனர். பின்னர் மருத்துவமனை பணியாளர்கள், பெண்களுக்கு 100 டோக்கனும், ஆண்களுக்கு 100 டோக்கனும் வழங்கி அவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனால் மீதமுள்ள மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். எனவே ராஜதானி பகுதிக்கு கூடுதல் கோவேக்சின் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story