புதுப்பொலிவு பெறும் ஊட்டி தாவரவியல் பூங்கா


புதுப்பொலிவு பெறும் ஊட்டி தாவரவியல் பூங்கா
x
தினத்தந்தி 29 July 2021 9:15 PM IST (Updated: 29 July 2021 9:43 PM IST)
t-max-icont-min-icon

ஜனாதிபதி வருகையையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்கா புதுப்பொலிவு பெறுகிறது. மேலும் ராஜ்பவன் சாலையிலும் சீரமைப்பு பணி தீவிரமாக நடைபெறுகிறது.

ஊட்டி,

தமிழகத்தில் அடுத்த மாதம்(ஆகஸ்டு) 2-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை சென்னை, ஊட்டியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறார். சென்னையில் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு 3-ந் தேதி கோவைக்கு வந்து, அங்குள்ள சூலூர் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி தீட்டுக்கல் பகுதிக்கு வருகிறார்.

அங்கிருந்து கார் மூலம் தாவரவியல் பூங்கா மேல் பகுதியில் உள்ள ராஜ்பவனுக்கு சென்று தங்குகிறார். 4-ந் தேதி குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரி அதிகாரிகள் பயிற்சி மையத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொண்டு பேசுகிறார். 5-ந் தேதி ஊட்டி ராஜ்பவனில் தங்குகிறார். 6-ந் தேதி டெல்லி திரும்புகிறார். ஊட்டியில் ஜனாதிபதி 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதால் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளம் சீரமைக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்து கார் மூலம் தாவரவியல் பூங்கா வழியாக ராஜ்பவனுக்கு ஜனாதிபதி செல்வதால் படகு இல்லம், காந்தல் உள்ளிட்ட பகுதிகளில் சாலை சீரமைக்கப்பட்டு வருகிறது. ஊட்டி ராஜ்பவனுக்கு செல்லும் 2 சாலைகளும் சுத்தம் செய்யப்பட்டு உள்ளது.

நகராட்சி மூலம் சாலைகளை சீரமைக்கும் பணி நேற்று தீவிரமாக நடந்தது. ரூ.19 லட்சம் செலவில் புதிதாக தார் சாலை அமைக்கப்படுகிறது. இந்த பணியை நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பூங்கா வழியாக ராஜ்பவனுக்கு சாலைகள் செல்வதால், பூங்காவில் அலங்கார செடிகளை வெட்டி அழகுபடுத்துவது, புல்வெளிகளை பராமரிப்பது, கீழே விழுந்த இலைகளை அகற்றுவது என பராமரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

தாவரவியல் பூங்கா நுழைவுவாயில் மற்றும் டிக்கெட் வழங்கும் இடம் வர்ணம் தீட்டப்பட்டு வருகிறது. நுழைவுவாயில் கதவில் வெள்ளை நிற வர்ணம் பூசப்படுகிறது. நூற்றாண்டு பழமை வாய்ந்த கட்டிடம் பழமை மாறாமல் புதுப்பொலிவுப்படுத்தப்படுகிறது. தாவரவியல் பூங்கா சாலையின் இருபுறமும் வண்ணமயமாக்கப்படுகிறது. அலங்கார விளக்குகள், நடைபாதை தடுப்புகள் ஒரே வண்ணத்தில் காட்சி அளிக்கும் வகையில் வர்ணம் தீட்டப்படுகிறது.

போலீசார் சாலையோரம் வைக்கப்படும் தடுப்புகளுக்கு வர்ணம் தீட்டி வருகின்றனர். ராஜ்பவன் கட்டிடம் சீரமைக்கப்பட்டு வருவதுடன், நுழைவுவாயில் மற்றும் அங்கு செல்லும் பாதை வர்ணம் தீட்டி புதுப்பிக்கப்படுகிறது.


Next Story