பொள்ளாச்சி ஜோதி நகரில் ரூ 10 கோடியில் பிரமாண்டமான பசுமை பூங்கா
பொள்ளாச்சி ஜோதி நகரில் ரூ.10 கோடியில் பிரமாண்டமான பசுமை பூங்கா அமைக்கப்பட்டு வருவதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி ஜோதி நகரில் ரூ.10 கோடியில் பிரமாண்டமான பசுமை பூங்கா அமைக்கப்பட்டு வருவதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
பசுமை பூங்கா
பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் நவீன பூங்கா அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். இதை தொடர்ந்து ஜோதி நகரில் ரூ.10 கோடியில் பிரமாண்டமான பசுமை பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்காக முதற்கட்டமாக ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து சுற்றுச்சுவர் கட்டப்பட்டு பணிகள் தொடங்கின. செயற்கை நீருற்று, மரம் மனிதனின் உருவம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் பூங்காவிற்கு வெளியே பராம்பரிய கலைகள், விளையாட்டுக் கள் குறித்த ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
செயற்கை நீர்வீழ்ச்சி
பொள்ளாச்சி ஜோதி நகரில் 4 ஏக்கரில் பசுமை பூங்கா அமைக்க ரூ.1 கோடியில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டன. இதை தொடர்ந்து ரூ.3 கோடியில் உடற்பயிற்சி செய்வதற்கு எண் 8 போன்ற மாதிரி அமைக்கப்பட்டு உள்ளது.
இங்கு பொதுமக்கள் நடந்து சென்று உடற்பயிற்சி செய்யலாம். குழந்தைகள் விளையாடுவதற்கு ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்டவை கொண்ட சிறுவர் பூங்கா அமைக்கப்படுகிறது.
நுழைவு வாயில் மரம் மனிதனின் உருவம் தத்ரூபமாக அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் 16 அடி உயரத்துக்கு செயற்கை நீர்வீழ்ச்சி அமைக்கப் படுகிறது.
அங்கு 200 பேர் வரை அமர்ந்து நீர்வீழ்ச்சியை பார்த்து ரசிக்க வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது. சாப்பிடுவதற்கு தனியாக வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
டைனோசர் பூங்கா
மேலும் பூங்காவில் அமர்ந்து பொழுதுபோக்க வசதியாக 5 குடில்கள் அமைக்கப்படுகிறது. மேலும் பூங்கா பசுமையாக மாற்றும் வகையில் 210 செடிகள் நடப்படுகின்றன.
இதை தவிர நுழைவு வாயிலில் பாரம்பரிய விளையாட்டுக்கள் மற்றும் கலைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது.
2-வது கட்டமாக ரூ.6 கோடியில் யோகா பயிற்சி, மெடிக்கல் சென்டர், சிறுவர் பூங்கா அமைக்கப்படுகிறது. மேலும் டைனோசர் பூங்காவும் அமைக்கப்படுகிறது.
இந்த பூங்காவிற்கு உள்ளே நுழைந்தால் மழைக்காடுகளை காணலாம். வனப்பகுதிக்குள் மழைத்துளி விழுவது போன்று தத்ரூபமாக அமைக்கப்பட உள்ளது.
மழைக்காடு
மேலும் மழைக்காட்டை ரெயிலில் சென்று பார்க்க ஏற்பாடுகள் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. தாவரவியல் மற்றும் பட்டாம்பூச்சி பூங்காவும் அமைக்கப்படுகிறது.
பணிகள் முழுமை பெறும்போது கோவை மாவட்டத்திலேயே பிரமாண்ட பூங்காவாக இந்த பூங்கா இருக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story