கள்ளக்குறிச்சி பகுதியில் ரூ.91 லட்சம் மோசடி வழக்கில் சேலத்தை சேர்ந்த பெண் கைது 15 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார்


கள்ளக்குறிச்சி பகுதியில் ரூ.91 லட்சம் மோசடி வழக்கில் சேலத்தை சேர்ந்த பெண் கைது 15 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார்
x
தினத்தந்தி 29 July 2021 10:07 PM IST (Updated: 29 July 2021 10:07 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி பகுதியில் ரூ.91 லட்சம் மோசடி வழக்கில் சேலத்தை சேர்ந்த பெண், 15 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம், 

சேலம் மாவட்டம் அம்மாப்பேட்டையை அடுத்த பச்சப்பட்டியை சேர்ந்த செல்வம் மனைவி சுகந்தி என்கிற விஜயலட்சுமி (வயது 42), கிருஷ்ணமூர்த்தி மனைவி காயத்திரி (41)  ஆவார்கள். 

இவர்கள் கடந்த 2006-ம் ஆண்டில் கள்ளக்குறிச்சி, பொற்படாக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம், தாங்கள் கள்ளக்குறிச்சியில் தனியார் அறக்கட்டளை,  திருக்கோவிலூரில் மகளிர் சங்கம் நடத்தி வருவதாகவும், தங்களுக்கு தெரிந்த ஒருவர் விழுப்புரம் தாட்கோ அலுவலகத்தில் பணிபுரிவதாகவும், அவர் மூலமாக கடனுதவி பெற்றுத்தருவதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் எங்களிடம் ரூ.15 ஆயிரம் செலுத்தினால் ரூ.1 லட்சம் வரை கடனுதவி தருவதாகவும், ரூ.50 ஆயிரத்தை தவணை முறையில் செலுத்தினால் அதே 50 ஆயிரம் ரூபாயை மானியமாக தருவதாகவும் கூறினர். 

இதை நம்பிய பொதுமக்கள், அந்த அறக்கட்டளையில் பணம் செலுத்தினர். இவ்வாறாக 50-க்கும் மேற்பட்டோர் ரூ.91 லட்சம் வரை செலுத்தியுள்ளனர். பணத்தை வசூலித்த சுகந்தியும், காயத்திரியும், உரியவர்களுக்கு திரும்ப கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்து திடீரென தலைமறைவாகி விட்டனர்.

சேலம் பெண் கைது

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சில மாதங்களிலேயே சுகந்தியை கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த காயத்திரி, கடந்த 2007-ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்று வெளியே வந்தார். 

அதன் பிறகு சில ஆண்டுகள் மட்டுமே கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜராகி வந்த அவர், கடந்த 10 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். இதனால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டதால் அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு காயத்திரியை கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் கடலூர் பெண்கள் சிறையில் அடைத்தனர். 

இதையறிந்த விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், கடந்த 2006-ல் பதியப்பட்ட ரூ.91 லட்சம் மோசடி வழக்கில், கள்ளக்குறிச்சி நீதிமன்ற உத்தரவின்படி காயத்திரியை கைது செய்து பிடிவாரண்டு ஆணையை நிறைவேற்றி மீண்டும் அதே சிறையில் அடைத்தனர்.

Next Story