தொகுப்பூதிய பணியிடங்களுக்கு நேர்காணல்
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொகுப்பூதிய பணியிடங்களுக்காக ந்டந்த நேர்காணலில் கலந்து கொள்வதற்காக 300-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி,
கொரோனா பேரிடர் காரணமாக மக்கள் நலனை கருத்தில் கொண்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையங்களில் தொகுப்பூதிய அடிப்படையில் 6 மாத காலத்திற்கு ஒரு மாதத்திற்கு ரூ.12 ஆயிரம் சம்பளத்தில் ரேடியோகிராபர் 5 பேர், டயாலிஸ் டெக்னீசியன் (கிரேடு ||) 10 பேர், இ.சி.ஜி.டெக்னீசியன் 5 பேர், சிடி.ஸ்கேன் டெக்னீசியன் 5 பேர், மயக்கவியல் டெக்னீசியன் 15 பேர், மருந்தாளுநர் 5 பேர் மற்றும் மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் ஆய்வக நுட்புனர் 5 பேர் ஆகிய பணியிடங்களுக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான நேர்காணல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 29-ந்தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கல்லூரி முதல்வர் உஷா தலைமையில் மருத்துவ குழுவினர் முன்னிலையில் நேர்காணல் நடைபெற்றது.
கல்விச்சான்று
இந்த நேர்காணலில் எழுத்து மூலமான விண்ணப்பத்துடன் கல்விச்சான்று, இருப்பிடச்சான்று, சாதிச்சான்று, ஆதார் அட்டை அசல் மற்றும் நகல் சான்றுடன் விண்ணப்பத்தாரர்கள் கலந்து கொண்டனர்.
50 பணியிடங்களுக்கு கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திரண்டனர். கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் மருத்துக்கல்லூரியில் நேர்காணலுக்கு வந்தவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் திரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story