தண்டராம்பட்டு அருகே இரு தரப்பினரிடையே கோஷ்டி மோதல்; வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது


தண்டராம்பட்டு அருகே இரு தரப்பினரிடையே கோஷ்டி மோதல்; வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது
x
தினத்தந்தி 29 July 2021 10:42 PM IST (Updated: 29 July 2021 10:42 PM IST)
t-max-icont-min-icon

தண்டராம்பட்டு அருகே ஏற்பட்ட மோதலில் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. 10 பேர் காயமடைந்தனர். 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் திருமணம் நின்றது.

தண்டராம்பட்டு

முன் விரோதம்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகிலுள்ள தரடாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் இணையத்துல்லா (வயது 45), முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர். இவரது பதவி காலத்தில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பாக அதே ஊரை சேர்ந்த சையத் கவுஸ்கான் (50) சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். முறைகேடு நிரூபிக்கப்பட்டதால் இணையத்துல்லாவுக்கு கோர்ட்டு அபராதம் விதித்தது.
இதனால் இருதரப்பினருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டு, அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. பலமுறை காவல்துறை மற்றும் தாசில்தார் தரப்பில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை

இருதரப்பினர் மோதல்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சையத் கவுஸ்கானை ஜமாத்தில் இருந்து விலக்கி வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று சையத் கவுஸ்கானின் உறவினருக்கு அதே ஊரில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனவே திருமணத்திற்கு சமையல் செய்வதற்காக நேற்றுமுன்தினம் மாலை கவுஸ்கான் மற்றும் உறவினர்கள் ஜமாத்திற்கு சென்று சமையல் பாத்திரங்களை கேட்டுள்ளனர். மேலும் நடந்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பதாகவும், திருமணத்தை நடத்தி தரும்படியும் தெரிவித்துள்ளனர். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. 

இந்த வாய்த்தகராறு முற்றி கலவரமாக மாறியது. இருதரப்பினரும் தடி, கத்தி ஆகியவற்றுடன் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இருசக்கர வாகனம் மற்றும் கார் ஆகியவற்றை அடித்து நொறுக்கினர். இந்த கலவரத்தில் இணையதுல்லா உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

போலீஸ் குவிப்பு

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் நூற்றுக்கணக்கான ஆயுதப்படை போலீசார் அங்கு குவிக்கப்பட்டு கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. சம்பவம் நடைபெற்ற பகுதியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி, கூடுதல் சூப்பிரண்டுகள் அசோக்குமார், வெள்ளைத்துரை ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரண நடத்தினர். சாத்தனூர் போலீசார் இந்த கலவரம் தொடர்பாக 39 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, சையத் கவுஸ்கான் உள்பட 13 பேரை கைது செய்தனர். மேலும் தரடாப்பட்டு கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டு இரவு பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கலவரத்தின் காரணமாக நேற்று நடைபெற இருந்த திருமணம் நின்றது.

Next Story