கோவையில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.50 லட்சம் மோசடி; 2 பேர் மீது வழக்கு
கோவையில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.50 லட்சம் மோசடி செய்த கேரள வாலிபர்கள் ப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை
கோவையில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.50 லட்சம் மோசடி செய்த கேரள வாலிபர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது:-
நிதி நிறுவனம்
கோவை 100 அடி ரோட்டில் "தோட்டத்தில் சிட்ஸ்" என்ற நிதி நிறுவனத்தை கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ரஜீஷ் (வயது 33), ராஜ மணிகண்டன் (35) ஆகியோர் நடத்தி வந்தனர். இந்த நிதி நிறுவனத்தில் கோவை கிருஷ்ணமூர்த்தி அய்யர் வீதியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் என்பவர் சேர்ந்து ரூ.1 லட்சத்து 41 ஆயிரம் செலுத்தினார்.
பின்னார் தான் செலுத்திய பணத்தை திருப்பி தரும்படி நிதி நிறுவன உரிமையாளர்கள் ரஜீஷ், ராஜமணிகண்டன் ஆகியோரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் இன்னும் சில நாட்களில் பணத்தை திருப்பி தருகிறோம் என கூறியுள்ளனர். ஆனால் பணத்தை கொடுக்காமல் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளனர்.
2 பேர் மீது வழக்கு
இந்த நிலையில் நவநீதகிருஷ்ணன் பணத்தை கேட்பதற்காக நேரடியாக நிதி நிறுவனத்திற்கு சென்றார். அப்போது நிதி நிறுவனம் அடைக்கப்பட்டிருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் இதுகுறித்து, கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதில், நிதி நிறுவனம் நடத்திய ரஜீஷ், ராஜமணிகண்டன் இதேபோல பலரிடம் ரூ.50 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story