வள்ளிமலை சுப்பிரமணியசாமி கோவிலுக்கு பக்தர்கள் காவடி எடுத்து வர தடை


வள்ளிமலை சுப்பிரமணியசாமி கோவிலுக்கு பக்தர்கள் காவடி எடுத்து வர தடை
x
தினத்தந்தி 29 July 2021 6:11 PM GMT (Updated: 29 July 2021 6:11 PM GMT)

வள்ளிமலை சுப்பிரமணியசாமி கோவிலுக்கு காவடி எடுத்து வரவும், தேர் திருவிழா நடத்தவும் தடைவிதித்து வேலூர் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

திருவலம்

காவடி எடுத்துவர தடை

வேலூர் மாவட்டத்தில் உள்ள வள்ளிமலை சுப்பிரமணியசாமி கோவிலில் நடைபெறும் ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இத்திருவிழாவுக்கு தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் காவடி எடுத்து வருவார்கள். 

இந்த ஆண்டுக்கான ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா வருகிற 1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழாவின்போது பக்தர்கள் காவடி எடுத்து வரவும், தெப்பத்திருவிழா நடத்தவும் தடைவிதித்து வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும், திருவிழா தொடர்பாகவும் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை கோவில் வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, வேலூர் உதவி கலெக்டர் விஷ்ணுபிரியா தலைமை தாங்கினார். கோவில் செயல் அலுவலர் சிவா வரவேற்றார்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:-

கர்ப்பிணி, சிறுவர்களுக்கு அனுமதியில்லை 

கோவிலுக்கு காவடி எடுத்து வரவும், பொங்கல் வைப்பதற்கும், அலகு குத்தி பிரார்த்தனை செய்வதற்கும், அங்கப்பிரதட்சணம் செய்வதற்கும் மற்றும் இதர பிரார்த்தனைகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது. பக்தர்கள் பங்கேற்புடன் சாமி ஊர்வலம் செல்லவும், தெப்பத் திருவிழா நடத்தவும் தடை விதிக்கப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள் மற்றும் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் விழாவில் கலந்து கொள்ள அனுமதி இல்லை. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். 

பக்தர்களை வரிசைப்படுத்தி ஒரு சமயத்தில் 20 நபர்களை மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும். கோவில் வளாகத்தில் பூ, தேங்காய், பழம் போன்றவற்றை விற்க தடை விதிக்கப்படுகிறது. கோவிலுக்குள் பிரார்த்தனைக்காக பக்தர்கள் அன்னதானம் வழங்குவதற்கு அனுமதி கிடையாது. இசைக் கச்சேரி, ஆடல் பாடல் நிகழ்ச்சி, பஜனை மற்றும் நாடகம் போன்றவற்றை நடத்துவதற்கும், பக்தர்களுக்கு மொட்டை அடிப்பதற்கும், பிரசாதம் வழங்குவதற்கும், குளங்களில் குளிப்பதற்கும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

கூட்டத்தில் காட்பாடி தாசில்தார் சரண்யா மற்றும் காவல்துறை, சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, போக்குவரத்து, மின்சாரம், தீயணைப்புத் துறை அதிகாரிகள், தெப்ப உற்சவ கமிட்டியினர் உள்ளிட்ட விழாக்குழுவினர், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். முடிவில் மேலாளர் நித்யானந்தம் நன்றி கூறினார்.

Next Story