விற்பனையாளரை முற்றுகையிட்ட மலைவாழ் மக்கள்
ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக கூறி, ரேஷன் கடை விற்பனையாளரை மலைவாழ் மக்கள் முற்றுகையிட்டனர்.
தளி
ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக கூறி, ரேஷன் கடை விற்பனையாளரை மலைவாழ் மக்கள் முற்றுகையிட்டனர்.
முற்றுகை
உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள கோடந்தூர், பொருப்பாறு, ஆட்டுமலை, ஈசல்தட்டு, தளிஞ்சி, தளிஞ்சிவயல், காட்டுப்பட்டி, மாவடப்பு, குருமலை, மேல்குருமலை உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள். இவர்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகிறார்கள். ஆனாலும் அனைத்து விதமான பயிர்களையும் சாகுபடி செய்வதற்கு முடிவதில்லை. இதனால் அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்காக அடிவாரப்பகுதிக்கு வரவேண்டி உள்ளது.
மேலும் ரேஷன் பொருட்களும் மலைவாழ் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மாவடப்பு பகுதியில் வழங்கப்பட்ட ரேஷன் அரிசி தரமில்லாமல் இருப்பதாக மலைவாழ் மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளனர். மேலும் ரேஷன் கடை பணியாளர் மற்றும் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது
தரமான அரிசி வழங்க வேண்டும்
மாவடப்பு மற்றும் காட்டுப்பட்டி பகுதியில் 200 குடும்பங்கள் உள்ளன. எங்கள் பகுதிக்கு தேவையான ரேஷன் பொருட்களை மாவடப்பு பகுதியில் வைத்து வழங்கி வருகின்றனர். இதற்கு முன்பு 7 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று காடம்பாறையில் பொருட்களை வாங்கி வந்தோம். நாங்கள் விடுத்த கோரிக்கையின் பேரில் கடந்த 2 வருடங்களாக மாவடப்பு பகுதிக்கு வந்து ரேஷன் பொருட்களை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 3மாதங்களாக வழங்கப்படுகின்ற ரேஷன் அரிசி தரமற்றதாக உள்ளது. அரிசி ஒரு வித வாசனையுடன் கருப்பு மற்றும் பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது. இதுகுறித்து ரேஷன் கடை பணியாளரிடம் கேட்டால் அடுத்த மாதம் நல்ல அரிசி கொண்டுவந்து தருகிறோம் என்று கூறியே மூன்று மாதங்களை கடத்தி விட்டனர்.இந்த நிலையில் நேற்று மீண்டும் அதே போன்று தரமற்ற ரேஷன் அரிசியை வழங்கினார்கள்.அந்த அரிசியை பயன்படுத்த முடியாத சூழலில் உள்ளதால் பசி பட்டினியால் வாடும் சூழலுக்கு அனைவரும் தள்ளப்பட்டு உள்ளோம்.எந்தவித அத்தியாவசிய பொருட்களும் கிடைக்காத வனப்பகுதியில் தரமற்ற பொருட்களை வழங்குவது வேதனை அளிக்கிறது.எனவே அதிகாரிகள் தரமான ரேஷன் அரிசி மற்றும் பொருட்களை எங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story