பொது இட ஆக்கிரமிப்பு அகற்றம்: போலீஸ் பாதுகாப்புடன் ஈமக்காரியம்
பரம்த்திவேலூர் அருகே பொது இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் ஈமக்காரியம் நடந்தது.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் அருகே உள்ள ஓலப்பாளையம் திருமணிமுத்தாறு பகுதியில் பொது இடம் ஒன்று உள்ளது. ஆற்றின் கரையோரம் உள்ள இந்த இடத்தில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இறந்தவர்களுக்கு ஈமக்காரியம் செய்து வருகின்றனர். இதனிடையே தனிநபர் ஒருவர் அந்த பொது இடத்தை ஆக்கிரமித்து அதில் தென்னங்கன்றுகளை நட்டுள்ளார். மேலும், அதனை சுற்றி கம்பி வேலி அமைத்து, யாரும் செல்ல முடியாதபடி தடுத்துள்ளார்.
இந்தநிலையில் ஓலப்பாளையம் பகுதியை சேர்ந்த ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவரின் ஈமக்காரியங்களை செய்ய குடும்பத்தினர், உறவினர்கள் திருமணிமுத்தாறு கரையோர பகுதிக்கு வந்தனர். அப்போது அவர்கள், ஈமக்காரியம் நடக்கும் பொது இடம் ஆக்கிரமிக்கப்பட்டு, வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் பரமத்திவேலூர் போலீசார், வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன், பாலப்பட்டி வருவாய் ஆய்வாளர் துரைராஜ் மற்றும் போலீசார், வருவாய்த்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். இதையடுத்து அவர்கள் கம்பி வேலி மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். தொடர்ந்து ஈமக்காரியங்கள் நடக்க அனுமதித்து, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், பொதுமக்கள் இறவர்களுக்கு ஈமக்காரியங்களை செய்யும் இடத்தை ஆக்கிரமிக்காதவாறு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் அங்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story