நாமக்கல் மாவட்டத்தில் 5.36 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி-சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் 5.36 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா முதல் அலையில் 111 பேர் உயிரிழந்தனர். 2-வது அலையில் நேற்று வரை 333 பேர் இறந்து உள்ளனர். இவர்களில் பெரும்பாலான நபர்கள் தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் என்கிற தகவல் வெளியாகி உள்ளதால், அனைத்து தரப்பினரும் தடுப்பூசி போட்டு கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். சில தடுப்பூசி செலுத்தும் முகாம்களில் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் தடுப்பூசி போட்டு கொள்வதை பார்க்க முடிகிறது.
இந்தநிலையில் நாமக்கல் மாவட்டத்தில் நேற்று சுமார் 2 வாரங்களுக்கு பிறகு கோவேக்சின் 2-ம் தவணை தடுப்பூசி 15-க்கும் மேற்பட்ட மையங்களில் போடப்பட்டது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் தடுப்பூசியை போட்டு சென்றனர். இதேபோல் கர்ப்பிணிகள் மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. நாமக்கல் அருகே உள்ள எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ள காலை முதலே பொதுமக்கள் குவிந்தனர். நேற்று ஒரே நாளில் 5,203 பேர் தடுப்பூசி போட்டு கொண்டனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 36 ஆயிரத்து 141 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதில் 45 வயது முதல் 60 வயது உள்ளவர்களில் இணை நோய் இல்லாதவர்கள் 66,470 பேரும், இணை நோய் உள்ளவர்கள் 68,703 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 74,472 பேரும், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 1 லட்சத்து 93 ஆயிரத்து 782 பேரும் கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளனர். கொரோனாவில் இருந்து பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் இடையே தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்கிற விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு உடனுக்குடன் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story