மரவள்ளிக்கிழங்கில் பூச்சி தாக்குதல்: ரூ.50 கோடி நஷ்டம் ஏற்படும் அபாயம்-விவசாயிகள் கவலை
மரவள்ளிக்கிழங்கில் கள்ளி பூச்சி தாக்குதலால் ரூ.50 கோடி வரை நஷ்டம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நாமக்கல்:
பூச்சி தாக்குதல்
தமிழ்நாட்டில் மரவள்ளிக்கிழங்கு உற்பத்தியில் நாமக்கல் மாவட்டம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இங்கு 5 ஆயிரம் ஏக்கர்களுக்கு மேலாக மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்டு வருகிறது. குறிப்பாக மோகனூர், நாமகிரிப்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் மரவள்ளிக்கிழங்கு பயிர் செய்து உள்ளனர்.
7 மாத பயிராக உள்ள மரவள்ளிக்கிழங்கில் இந்த ஆண்டு புதிதாக கள்ளி பூச்சி மற்றும் செம்பேன் என்ற வைரஸ் பரவி மரவள்ளிக்கிழங்கு பயிரை தாக்கி முற்றிலுமாக சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
முன்பெல்லாம் மரவள்ளி பயிரில் மாவுப்பூச்சி தாக்குதல் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு புதிதாக கள்ளி பூச்சி மற்றும் செம்பேன் வைரஸ் தாக்கி வருகிறது. இதனால் 100 ஏக்கர் மரவள்ளிக்கிழங்கு பயிருக்கு ரூ.1 கோடி வீதம் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
ரூ.50 கோடி இழப்பு
குறிப்பாக தோழூர் மற்றும் புதுப்பாளையம் பகுதியில் மட்டும் 300 ஏக்கர் பயிரில் இந்த வைரஸ் தாக்குதல் காணப்படுகிறது. இதனால் அந்த பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு ரூ.3 கோடி இழப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. நாமக்கல் மாவட்ட அளவில் விவசாயிகளுக்கு சுமார் ரூ.50 கோடி வரை இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் மரவள்ளிக்கிழங்கை தாக்கியுள்ள கள்ளி பூச்சி, செம்பேன் வைரசை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story