கல் குவாரிகளை மூடக்கோரி, இறந்தவர் உடலுடன் பொதுமக்கள் சாலை மறியல்
குன்னம் அருகே தண்ணீர் லாரி மோதி விவசாயி உயிரிழந்தார். இதனால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கல் குவாரிகளை மூடக்கோரி இறந்தவர் உடலுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குன்னம்
வாலிபர் பலி
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள க.எறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவரது மகன் ராமச்சந்திரன் (வயது 34). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு தற்போது சொந்த ஊரான க. எறையூர் கிராமத்தில் விவசாயம் பார்த்து வந்தார். திருமணமான இவருக்கு ராதிகா என்கிற மனைவியும், 4 மாதத்தில் ஆண் குழந்தையும் உள்ளது.
இந்தநிலையில் நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக கிராமத்தில் இருந்து மெயின் சாலைக்கு ராமச்சந்திரன் வந்தார்.
க.எறையூர் பிரிவு சாலையில் அங்குள்ள குளத்திற்கு அருகே அவர் சென்றபோது அந்த வழியாக சென்ற தனியார் கிரஷர் நிறுவனத்திற்கு சொந்தமான தண்ணீர் டேங்கர் லாரியை ராமச்சந்திரம் முந்திச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது மண் சறுக்கியதில் லாரியின் வலதுபுற பின் சக்கரத்தில் மோட்டார் சைக்கிளும் தவறி விழுந்தார். இதில், ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
சாலை மறியல்
இதுகுறித்து தகவல் அறிந்த ராமச்சந்திரனின் உறவினர்கள் மற்றும் க.எறையூர் கிராம பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் பெரம்பலூர்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே தடுப்புகளையும், கற்களையும் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கிய பிரகாசம், துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், குன்னம் தாசில்தார் கிருஷ்ணராஜ், பெரம்பலூர் தாசில்தார் சின்னதுரை ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் தரப்பில், க.எறையூர் பகுதியில் அரசு அனுமதி பெற்ற கல் குவாரிகளை விட அனுமதி பெறாத கல்குவாரிகள் அதிகம் இயங்கி வருகின்றன. அந்த குவாரிகளில் பாறைகளை உடைப்பதற்காக சக்தி வாய்ந்த வெடி வைத்து தகர்க்கப்படுவதால் ஏற்படும் நில அதிர்வுகளால் வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது.
குவாரிகளை மூட வேண்டும்
மேலும், இப்பகுதிகளில் கல் குவாரிகள் அதிகம் இயங்குவதால் லாரிகளின் போக்குவரத்தும் அதிகமாக உள்ளது. அவற்றில் சில லாரிகள் அதிக வேகமாக இயக்கப்படுவதால் சாலைகள் பழுதடைவதுடன் அடிக்கடி வாகன விபத்துகளும் ஏற்படுகின்றன. தற்போது வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எனவே, க.எறையூர் பகுதிகளில் அனுமதியின்றி செயல்படும் கல்குவாரிகள் மற்றும் கிரசர்களை உடனடியாக மூட வேண்டும். மாவட்ட கலெக்டர் இங்கு வந்து எங்கள் நிலையை அறிய வேண்டும். விபத்தில் உயிரிழந்த ராமச்சந்திரனுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
உடலை எடுக்க மறுப்பு
இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும், தற்போது இறந்தவர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும், சாலை மறியலை விலக்கி கொள்ளுங்கள் என்று தாசில்தார்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். ஆனால், அதனை ஏற்க மறுத்த பொதுமக்கள் இறந்த ராமச்சந்திரனின் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்ல அனுமதிக்க மறுத்ததோடு, தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
பின்னர், விரைவு அதிரடிப்படை போலீசார் வரவழைக்கப்பட்டு கூட்டத்தை கலைத்தனர். அதனைத்தொடர்ந்து ராமச்சந்திரன் உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தால் அரியலூர்-பெரம்பலூர் சாலையின் இருபுறமும் சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பின்னர் போக்குவரத்து சீரானது.
இந்த விபத்து தொடர்பாக டேங்கர் லாரியின் டிரைவர் நக்கசேலம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த மணி மகன் கதிரேசன் (24) என்பவரை மருவத்தூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story