திருவோணத்தில் விவசாயிகள் சாலைமறியல்


திருவோணத்தில் விவசாயிகள் சாலைமறியல்
x
தினத்தந்தி 30 July 2021 1:47 AM IST (Updated: 30 July 2021 1:47 AM IST)
t-max-icont-min-icon

குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் விலையில்லா உரங்கள் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக கூறி திருவோணத்தில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஒரத்தநாடு:
குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் விலையில்லா உரங்கள் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக கூறி திருவோணத்தில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பாரபட்சம் காட்டப்படுவதாக புகார்
தஞ்சை மாவட்டத்தில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள  விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் விலையில்லா உரங்கள் வழங்கிட தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி திருவோணம் வட்டாரத்தில் விவசாயிகள் குறுவை தொகுப்பு திட்டத்தில் விண்ணப்பம் அளித்துள்ளனர். அவர்களுக்கு கடந்த சில தினங்களாக விலையில்லா உரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் வெங்கரை ஊராட்சிக்குட்பட்ட இடையங்காடு, திப்பன் விடுதி உள்ளிட்ட சில பகுதிகளை  சேர்ந்த விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் விலையில்லா உரங்கள் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக கூறி விவசாயிகள் நேற்று மாலை திருவோணம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலைமறியல்
மேலும் திடீரென விவசாயிகள் சாலையின் குறுக்கே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த திருவோணம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திருச்சிற்றம்பலம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து விவசாயிகள் மறியலை கைவிட்டனர்.
தொடர்ந்து விவசாயிகள் மீண்டும் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு சென்று, அங்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) விஜய்பாபுவிடம் போலீசார் முன்னிலையில் முறையிட்டனர். 
கடும் வாக்குவாதம்
அப்போது விவசாயிகள் விலையில்லா உரங்கள் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக கூறி அதிகாரிகளிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதன்பிறகு தொடர்புடைய உயர் அதிகாரியிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக வேளாண்மை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 
இதனை தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக ½ மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story