சேலத்தில் அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி மீது 5 பிரிவுகளில் வழக்கு


சேலத்தில் அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி மீது 5 பிரிவுகளில் வழக்கு
x
தினத்தந்தி 30 July 2021 2:08 AM IST (Updated: 30 July 2021 2:08 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. அரசை கண்டித்து அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக சேலத்தில் எடப்பாடி பழனிசாமி மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சேலம்
அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்தும், அதனை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும் நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதன்படி, சேலம் மாவட்டத்தில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சேலம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டின் முன்பு கட்சி நிர்வாகிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அதேபோல் மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு
சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசாரிடம் உரிய அனுமதி பெறவில்லை. இதனால் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி எடப்பாடி பழனிசாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதாவது, தி.மு.க. அரசுக்கு எதிராக அனுமதியில்லாமல் கூட்டம் கூடியது, பேரிடர் காலத்தில் அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காதது, கொரோனா நோய் தொற்று பரவுவதற்கு காரணமாக இருத்தல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்படி எடப்பாடி பழனிசாமி உள்பட நிர்வாகிகள் 90 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
5,200 பேர்
அதேபோல், சூரமங்கலம் உழவர் சந்தை அருகில் அனுமதியில்லாமல் ஆர்ப்பாட்டம் செய்த மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் உள்பட 280 பேர் மீதும், தாதகாப்பட்டியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. பாலசுப்பிரமணியன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சேலம் மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் 78 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட 5,200 பேர் மீது அந்தந்த பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story