உத்தர கன்னடா மாவட்டத்தில் வெள்ள சேதங்களை நேரில் பார்வையிட்டு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆய்வு


உத்தர கன்னடா மாவட்டத்தில் வெள்ள சேதங்களை நேரில் பார்வையிட்டு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆய்வு
x
தினத்தந்தி 30 July 2021 2:22 AM IST (Updated: 30 July 2021 2:22 AM IST)
t-max-icont-min-icon

உத்தர கன்னடா மாவட்டத்தில் வெள்ள சேதங்களை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பள்ளி குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்து கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மங்களூரு:

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை

  கர்நாடக முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து கர்நாடக புதிய முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில் நேற்று அவர் உத்தர கன்னடா மாவட்டத்திற்கு வந்து மழை வெள்ள சேதங்களை பார்வையிட்டார். இதற்காக அவர் பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளிக்கு வந்து, அங்கிருந்து காரில் உத்தர கன்னடாவை வந்தடைந்தார். முதலில் எல்லாப்புரா தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ள சேதங்களை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பார்வையிட்டார்.

  மேலும் எல்லாப்புரா தாலுகா அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று தடுப்பூசி போடும் பணிகளை பார்வையிட்டு அங்கிருந்த நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். மேலும் டாக்டர்களிடம் ஆஸ்பத்திரியில் உள்ள வசதிகள், மருந்துகள் இருப்பு போன்றவை குறித்து கேட்டறிந்தார். அதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரூ.695 கோடி நிதி

  உத்தர கன்னடா மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்ப்பதற்காக இங்கு வந்துள்ளேன். மாவட்டத்தில் அதிக அளவு வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழையால் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. வெள்ள நிவாரண பணிகளுக்காக மத்திய அரசின் தேசிய பேரிடர் நிதியில் இருந்து கர்நாடகத்திற்கு ரூ.695 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மாவட்ட கலெக்டரின் வங்கிக்கணக்கில் நிவாரண நிதியும் உள்ளது.

  அரேபயலு -எல்லாப்புரா தேசிய நெடுஞ்சாலையில் மழையால் மலை மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தை பார்வையிட்டேன். மண்சரிந்ததால் இடையே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. மாவட்டத்தில் 16 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து முடங்கியுள்ளது.

அலமட்டி அணை

  சீரமைப்பு பணிகள் வேகமாக நடந்து வருகிறது. எல்லாப்புரா தாலுகா கலச்சி கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தேன். அங்குள்ள பள்ளி குழந்தைகள் சரியான மின்சார வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்களால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான உதவிகளை உடனே செய்து கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அல்மாட்டி அணையில் நீர்மட்ட உயரம் உயர்த்தப்படும். இதனால் விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படும்.
  இவ்வாறு அவர் கூறினார்.

  இதையடுத்து அவர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக பேட்டியின் போது உத்தர கன்னடா மாவட்ட கலெக்டர் முல்லை முகிலன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரகாஷ் தேவராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Next Story