சேலத்தில் தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சேலம்
சேலம் பொன்னம்மாபேட்டை கார்பெட் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 40). இவர், கடந்த 2019-ம் ஆண்டு மது அருந்திவிட்டு சேட்டு என்பவரிடம் தகராறு செய்து அவரை மரக்கட்டையால் தாக்கியுள்ளார். இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜசேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பிறகு ஜாமீனில் வெளியே வந்த அவர், வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதால் கடந்த 6-ந் தேதி மீண்டும் கைது செய்யப்பட்டார்.
அதேபோல், ஜாகீர் அம்மாபாளையம் கல்யாண சுந்தரம் காலனி பகுதியை சேர்ந்த தீனா என்கிற தீனதயாளன் (28), தாதகாப்பட்டி சண்முகா நகரை சேர்ந்த பிரகாஷ் (24), மணியனூரை சேர்ந்த வைத்தீஸ்வரன் (33) ஆகியோரும் வழிப்பறி, மிரட்டி பணம் பறித்தல், பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் உள்ளிட்ட தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில், ராஜசேகர், தீனா, பிரகாஷ், வைத்தீஸ்வரன் ஆகிய 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று வீராணம், சூரமங்கலம், அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர். அதன்பேரில், அவர்கள் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா நேற்று உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story