மருத்துவ படிப்பில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் ஒதுக்கீடு: ஒட்டுமொத்த தமிழகத்திற்கு கிடைத்த வெற்றி அன்புமணி ராமதாஸ் கருத்து


மருத்துவ படிப்பில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் ஒதுக்கீடு: ஒட்டுமொத்த தமிழகத்திற்கு கிடைத்த வெற்றி அன்புமணி ராமதாஸ் கருத்து
x
தினத்தந்தி 30 July 2021 5:49 AM IST (Updated: 30 July 2021 5:49 AM IST)
t-max-icont-min-icon

அகில இந்திய மருத்துவ இடங்களில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது ஒட்டுமொத்த தமிழகத்திற்கு கிடைத்த வெற்றி என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

மருத்துவ கல்விக்கான அகில இந்தியத் தொகுப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலனுக்கான பா.ம.க.வின் நீண்டகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இப்போது தமிழ்நாட்டில் மட்டுமின்றி, நாடு முழுவதும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு ஆணையிட்டிருக்கிறது. இந்த இடஒதுக்கீடு நடப்பாண்டு முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் தேசிய அளவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 ஆயிரம் இடங்கள் கூடுதலாக கிடைக்கும். இது பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவக் கனவுகளை நனவாக்கும்.

மாபெரும் வெற்றி

இந்த அறிவிப்பு வரவேற்கப்பட வேண்டியதாகும். இது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு கோரி முதன்முதலில் வழக்குத்தொடர்ந்த பா.ம.க.வுக்கும், தமிழகத்தின் பிற அரசியல் கட்சிகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பு ஆகும். மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையின்போது தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, இந்தியாவில் எந்தக் கல்லூரியில் வாய்ப்புக் கிடைத்தாலும் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அகில இந்திய தொகுப்பு ரத்து செய்யப்பட்டு, அனைத்து இடங்களும் மாநில அரசுகளால் நிரப்பப்படவேண்டும் என்பது தான் பா.ம.க.வின் நிலை ஆகும். அந்த இலக்கை அடைவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பா.ம.க. மேற்கொள்ளும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story