படித்த படிப்புக்கு யாரும் வேலை தராததால் திருச்சியில் உணவகம் தொடங்கிய பட்டதாரி திருநங்கைகள் எங்களாலும் சாதிக்க முடியும் என பெருமிதம்


படித்த படிப்புக்கு யாரும் வேலை தராததால் திருச்சியில் உணவகம் தொடங்கிய பட்டதாரி திருநங்கைகள் எங்களாலும் சாதிக்க முடியும் என பெருமிதம்
x
தினத்தந்தி 30 July 2021 12:20 AM GMT (Updated: 30 July 2021 12:20 AM GMT)

திருச்சி ஏர்போர்ட் சாலையில் பட்டதாரி திருநங்கைகள் தள்ளுவண்டியில் புதிய உணவகத்தை தொடங்கி உள்ளனர்.

திருச்சி,

திருச்சி ஏர்போர்ட் சாலையில் பட்டதாரி திருநங்கைகள் தள்ளுவண்டியில் புதிய உணவகத்தை தொடங்கி உள்ளனர்.

புதிய உணவகம்

திருச்சி ஏர்போர்ட் சாலையில் பொன்மலை பிரிவு ரோட்டில் ஒரு புதிய தள்ளுவண்டி உணவகத்தில் வழக்கத்துக்கு மாறாக மக்களின் பார்வை திரும்பி இருப்பதை பார்க்க முடிந்தது. காரணம், கடையின் உரிமையாளர்கள் 6 பேரும் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட பட்டதாரி திருநங்கைகள்.

பல்வேறு தடைகளை தாண்டி, தனியார் தொண்டு நிறுவன உதவியுடன் சொந்தக்காலில் நிற்கும் முயற்சியாக அந்த தள்ளுவண்டி உணவகத்தை திருநங்கைகள் திறந்து இருக்கிறார்கள். 6 பேரும் பச்சை சீருடை அணிந்து மகிழ்ச்சியுடன் நின்றனர். 

தள்ளுவண்டி கடைக்கு "திரு அவள் டேஸ்டி புட் ஸ்டால்" என பெயர் சூட்டி உள்ளனர். பல்வேறு அரசு அலுவலகங்கள், தொண்டு நிறுவனங்களின் கதவுகளை தட்டியும் எந்த பலனும் இல்லாத நிலையில் அவர்களுக்கு திருச்சி பீடு தன்னார்வ தொண்டு நிறுவனம் உதவி செய்துள்ளது.
இதுபற்றி திருநங்கை ரியானா கூறியதாவது:-

6 பேரும் பட்டதாரிகள்

நாங்கள் சொந்த தொழில் செய்யும் முயற்சியாக ஒரு ஸ்டால் திறக்க முடிவு செய்தோம். ஆனால், போதுமான பணம் கையில் இல்லை. பீடு தொண்டு நிறுவனம் உறுதி அளித்தபடி ரூ.31 ஆயிரம் கொடுத்தது. மேலும் எங்களின் சேமிப்பு பணம் ரூ.20 ஆயிரம் முதலீட்டில் டேஸ்டி புட் ஸ்டாலை தொடங்கி இருக்கிறோம்.

இதில் பர்வீன் மற்றும் சயீசா ஆகிய இரு திருநங்கைகள் ஏற்கனவே உணவங்களில் வேலை செய்துள்ளனர். அந்த அனுபவம் கை கொடுத்துள்ளது. பட்டதாரிகளான இவர்கள் 6 பேருமே நன்கு படித்துள்ளனர். ஆனால் வேலை கிடைக்கவில்லை. இதில் சயீசா எம்.எஸ்.சி. தாவரவியல் பட்டமும், பர்வீன் சிவில் என்ஜினீயரிங் டிப்ளமோவும் முடித்துள்ளனர். மாயா என்ற திருநங்கை எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் டிப்ளமோவும், ஹரிணி என்பவர் எம்.எஸ்.சியும் படித்துள்ளனர். நமீதா மட்டுமே பிளஸ் -2 வரை படித்துள்ளார்.

வேலை கொடுக்கவில்லை

இவர்கள் பல நிறுவனங்களில் நேர்முகத்தேர்வுக்கு சென்றனர். ஆனால் திருநங்கைகள் என்பதால், தகவல் சொல்கிறோம் என கூறி சமாளித்து அனுப்பி இருக்கிறார்கள். பின்னர் யாரும் வேலை கொடுக்க முன்வரவில்லை. இவர்களில் பெரும்பாலானவர்களை அவர்களின் குடும்பத்தினர் ஒதுக்கி விட்டனர். 

தற்போது திறக்கப்பட்டுள்ள டேஸ்டி புட் ஸ்டாலில் இப்போதைக்கு சுட, சுட கறிதோசை, முட்டை தோசை, வெங்காய தோசை, பொடி தோசை, கீரை தோசை, காய்கறி தோசை, கோதுமை தோசை, காளான் தோசை என 8 வகையான தோசைகள் கிடைக்கின்றன. மேலும் இட்லியும் பரிமாறப்படுகிறது. திருநங்கைகள் புட் ஸ்டாலில் சாப்பிட்டவர்கள் நல்ல ருசியாக இருப்பதாக தெரிவித்தனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சாதிக்க முடியும் என நிரூபிப்போம்

மேலும் திருநங்கைகள் கூறுகையில், " எங்களாலும் வாழ்க்கையில் வெற்றிபெற முடியும். சாதிக்க முடியும் என்பதை உலகுக்கு நிரூபித்து காட்டுவோம். இதன் பரிணாம வளர்ச்சி நிச்சயம் ரெஸ்ட்டாரண்டு ஆக இருக்கும் என தீர்க்கமான நம்பிக்கை உள்ளது" என பெருமிதத்துடன் கூறினர். 

Next Story