திருச்சி மாநகரில் தனிப்படை போலீசார் அதிரடி: ரூ.20 லட்சம் குட்கா பறிமுதல்; 5 பேர் கைது


திருச்சி மாநகரில் தனிப்படை போலீசார் அதிரடி: ரூ.20 லட்சம் குட்கா பறிமுதல்; 5 பேர் கைது
x

திருச்சி மாநகரில் ரூ.20 லட்சம் மதிப்பிலான 55 மூட்டை குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி,
 
திருச்சி மாநகரில் ரூ.20 லட்சம் மதிப்பிலான 55 மூட்டை குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். 

ரூ.20 லட்சம் குட்கா பறிமுதல்

திருச்சி மாநகரில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க மாநகர காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று பாலக்கரை போலீஸ் எல்லைக்குட்பட்ட பென்சனர் காலனி மற்றும் எடத்தெரு ஆகிய இடங்களில் குடோன்களில் விற்பனைக்காக தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் தனிப்படை மற்றும் பாலக்கரை போலீசார் அடங்கிய குழுவினர் குறிப்பிட்ட கடைகள், குடோன்களில் சோதனை செய்தனர். அச்சோதனையில் அங்கு 55 மூட்டைகளில் இருந்த சுமார் 1,800 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை வாஸ்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.

5 பேர் கைது

மேலும் குடோன்களில் போதை பொருட்களை கடத்தி பதுக்கி வைத்ததாக திருச்சி திருவெறும்பூர் பாரதிபுரத்தை சேர்ந்த பூமிநாதன் (வயது 38), பாலக்கரை காஜாப்பேட்டை புதுத்தெருவை சேர்ந்த இளங்கோ (38), ஹரிகரன் (40) பாலக்கரை பென்சனர் தெருவை சேர்ந்த வடிவேல் (40) மற்றும் அரியமங்கலம் சீனிவாசாநகரை சேர்ந்த பழனிகுமார் (35) ஆகிய 5 பேர் மீது பாலக்கரை போலீசார் வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்தனர்.

மேலும் போதைப்பொருட்கள் கொண்டு வருவதற்கு பயன்படுத்தி வந்த 4 சக்கர சரக்கு வாகனம், இருசக்கர வாகனம் மற்றும் 4 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.20 லட்சம் மதிப்புள்ள 1,800 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்த தனிப்படையினரை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் பாராட்டினார். மேலும் திருச்சி மாநகரில் குட்கா விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.

Next Story