ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டதாக நாடகமாடிய பிரியாணி கடை ஊழியர் நண்பர்கள் 5 பேருடன் கைதானார்


ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டதாக நாடகமாடிய பிரியாணி கடை ஊழியர் நண்பர்கள் 5 பேருடன் கைதானார்
x
தினத்தந்தி 30 July 2021 9:44 AM IST (Updated: 30 July 2021 9:44 AM IST)
t-max-icont-min-icon

வியாசர்பாடியில் மர்மநபர்கள் தன்னை கத்திமுனையில் மிரட்டி ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்து சென்றதாக நாடகமாடிய பிரியாணி கடை ஊழியர், தனது நண்பர்கள் 5 பேருடன் கைதானார்.

பெரம்பூர்,

சென்னை மண்ணடியை தலைமை இடமாக கொண்டு, சென்னையில் 30-க்கும் மேற்பட்ட கிளைகளுடன் பிரபல பிரியாணி கடை இயங்கி வருகிறது. இதன் தலைமை அலுவலகத்தில் மண்ணடியை சேர்ந்த சுரேந்திரன் (வயது 35) என்பவர் வேலை செய்து வருகிறார்.

இவர், நேற்று முன்தினம் இரவு அனைத்து கிளைகளிலும் பிரியாணி விற்பனையில் வசூலான ரூ.10 லட்சத்துடன், மண்ணடியில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு மோட்டார்சைக்கிளில் சென்றதாகவும், வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையம் அருகே தன்னை வழிமறித்த 6 பேர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டதாகவும் வியாசர்பாடி போலீசில் புகார் செய்தார்.

நாடகமாடியது அம்பலம்

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து எம்.கே.பி. நகர் போலீஸ் உதவி கமிஷனர் தமிழ்வாணன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் பத்மாவதி தலைமையிலான தனிப்படையினர் சந்தேகத்தின்பேரில் 10-க்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரித்தனர். அதில் சுரேந்திரனுக்கு பணம் தேவைப்பட்டதால் அவர், பிரியாணி கடையில் வேலை செய்யும் தனது சக ஊழியரான கொளத்தூரை சேர்ந்த பிரகாஷ் (26) மற்றும் தனது நண்பர்களான பெரம்பூரை சேர்ந்த வேலாயுதம் (27), சாமுவேல் (26), நிர்மல்குமார் (30), பிரகாஷ் (27) ஆகிய 5 பேருடன் சேர்ந்து மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடித்ததாக நாடகமாடியது தெரியவந்தது.

மேலும் ரூ.10 லட்சத்தை அனைவரும் பங்கு பிரித்துக்கொள்ள திட்டமிட்டதும் தெரிந்தது. இதையடுத்து சுரேந்திரன் உள்பட 6 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

Next Story