முறையாக பொருட்கள் வழங்கக்கோரி ரேஷன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்


முறையாக பொருட்கள் வழங்கக்கோரி ரேஷன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 30 July 2021 6:08 AM GMT (Updated: 30 July 2021 6:08 AM GMT)

முறையாக பொருட்கள் வழங்கக்கோரி ரேஷன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரம் கிராமத்தில் உள்ள ரேஷன்கடை மூலமாக அந்த பகுதியை சேர்ந்த 500 ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ரேஷன்கடையில் கடந்த சில மாதங்களாக எந்த ஒரு பொருளும் முறையாக வழங்கப்படவில்லை. பிரதம மந்திரி திட்டம் மற்றும் மாநில அரசின் திட்டம் போன்றவற்றின் மூலம் வழங்கப்படும் விலையில்லா அரிசியும் பயனாளிகளுக்கு கிடைக்கவில்லை என்று புகார் கூறப்படுகிறது. இதனால் ரேஷன்கடையை நம்பி உள்ள குடும்பத்தினர் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள். இந்த நிலையில் நேற்று மேற்கண்ட ரேஷன்கடையை கிராம மக்கள் திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த கூட்டுறவு சங்க தலைவர் முல்லை வேந்தன், ஊராட்சி மன்ற தலைவர் செவ்வந்தி மனோஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து கலைந்து போக செய்தனர். இது தொடர்பாக பொதுமக்கள் கும்மிடிப்பூண்டி தாசில்தார் மகேஷிடம் கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தனர்.

Next Story