ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொழில் முனைவோருக்கு ரூ.50 லட்சம் மானியத்துடன் தொழில் கடன்


ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொழில் முனைவோருக்கு ரூ.50 லட்சம் மானியத்துடன் தொழில் கடன்
x
தினத்தந்தி 30 July 2021 6:30 PM IST (Updated: 30 July 2021 6:38 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொழில்முனைவோருக்கு ரூ.50 லட்சம் மானியத்துடன் தொழில் கடன் வழங்கப்பட இருப்பதாக கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை,

தமிழ்நாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்படவும், முதல் தலைமுறை தொழில் முனைவோர் நிறுவனங்களை தொடங்க புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பட்டம், பட்டயம் மற்றும் தொழிற்கல்வி படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோர் சுயமாக தொழில் தொடங்க வசதி செய்யப்பட்டுள்ளது.
வயதுவரம்பு பொதுப்பிரிவினருக்கு 21 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.

 சிறப்புப் பிரிவினரான மகளிர், ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயது 45 ஆகும். ஆண்டு வருமான உச்சவரம்பு எதுவுமில்லை. பயனாளிகள் 3 ஆண்டுகளுக்கு குறையாமல் தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

அனைத்து உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் தொடங்க இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச மதிப்பீடு ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.5 கோடி வரை கடன் பெற்று அதிகபட்ச மானியம் ரூ.50 லட்சம் வரை பெற்று பயன்பெறலாம்.

இத்திட்டத்தில் அரிசி ஆலை, மரச்சாமான்கள் தயாரித்தல், மாவு மில், அட்டை பெட்டி தயாரித்தல், ஆழ்துளை கிணறு அமைக்கும் வாகனம், கிரேன்கள், பேண்டேஜ் கிளாத், நடமாடும் உணவகம், கடலைமிட்டாய் தயாரித்தல், கால்நடை தீவனம் தயாரித்தல், பவர் லாண்டரி, ஸ்கேன் சென்டர், பிசியோதெரபி கிளினிக், ஹாலோ பிளாக், ஆயத்த ஆடைகள் தயாரிப்பு, ஸ்டீல் கட்டில், பீரோ மற்றும் சேவை சார்ந்த தொழில்களும் தொடங்கலாம். 

கொரோனா காரணமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தகுதிவாய்ந்த விண்ணப்பங்கள் நேர்முக தேர்வின்றி நேரடியாக வங்கிக்கு பரிந்துரைக்கப்படும்.

திட்ட மதிப்பீட்டில் பொதுப்பிரிவினர் 10 சதவீதமும், சிறப்புப் பிரிவினர் 5 சதவீதமும் தங்களது பங்காக முதலீடு செய்ய வேண்டும். தவணை தவறாமல் கடனை திருப்பி செலுத்தும் தொழில் முனைவோர்களுக்கு கூடுதல் சலுகையாக 3 சதவீதம் பின் முனை வட்டி மானியமும் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு ராணிப்பேட்டை தேவராஜ் நகரில் இயங்கி வரும் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 9894261683 தொலைபேசி என்ற எண்ணிலோ அல்லது மாவட்ட கலெக்டரின் வாட்ஸ்அப் எண் 9489829964-க்கு தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story