கொரடாச்சேரி அருகே கற்போம், எழுதுவோம் திட்ட பணிகள் ஆய்வு
கொரடாச்சேரி அருகே கற்போம், எழுதுவோம் திட்ட பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.
கொரடாச்சேரி,
தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை மூலம் கல்வி அறிவு பெறாத வயது வந்த மூத்தவர்களுக்கு எழுத்தறிவை கற்பிக்கும் வகையில் கற்போம் எழுதுவோம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பள்ளி செல்லாத வயது வந்தவர்களுக்கு சிறப்பு முகாம் அமைத்து எழுதப்படிக்க கற்றுத்தரப்படுகிறது.
இந்த முகாம் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்தில் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. கொரடாச்சேரி ஒன்றியத்தில் திருவிடைவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் கற்போம் எழுதுவோம் மையத்தில் திட்ட பணிகள் குறித்து திட்டத்தின் மாநில பார்வையாளர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.
கற்போம் எழுதுவோம் திட்டத்தின் மூலம் பெற்ற அடிப்படை எழுத்தறிவு மதிப்பீட்டினை மாநில பார்வையாளர் ஜெயராமன் ஆய்வு செய்தார். மேலும் அங்கிருந்த முதியோர்களிடம் இத்திட்டம் பயனுள்ளதாக உள்ளதா? எழுதப் படிக்கத் தெரிந்து கொண்டீர்களா? என்பதையும் கேட்டறிந்தார். மேலும் திட்டம் வெற்றியடைய ஆசிரியர்களும், கல்வித்துறை அலுவலர்களும் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். முன்னதாக மையத்தில் படித்து வரும் முதியவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
ஆய்வின் போது திருவாரூர் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவித் திட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன், வட்டார கல்வி அலுவலர் சம்பத், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் பிரபு, ஆசிரியர் பயிற்றுனர் சண்முகப்பிரியா மற்றும் தலைமை ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story