கோவையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று
கோவையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று
கோவை
கோவை மாவட்டத்தில் திடீரென்று கடந்த 4 நாட்களாக கொரோனா பாதிப்பு கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக தொழிற்சாலைகள் அதிகமுள்ள பகுதிகளிலும், மார்க்கெட் உள்ள பகுதிகளிலும் தொற்று அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவதை தவிர்ப்பதால் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுகுறித்து சுகாதார துறையினர் கூறியதாவது: -
தமிழகத்தில் கோவை உள்பட சில இடங்களில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. கோவை மாவட்டத்தில் கடந்த 28 -ந் தேதி 169 பேருக்கும், 29 -ந் தேதி 179 பேருக்கும், நேற்று முன்தினம் 188 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மாநகர் பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கு முன் தினசரி பாதிப்பு 100 -க்கு கீழ் இருந்தது. ஆனால் நேற்று 120 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா பரவல் 1 சதவீதத்தில் இருந்து 1.3 சதவீதமாக உயர்ந்து உள்ளது.
பொதுமக்கள் சமூக இடைவெளியை மறந்து கூட்டமாக வலம் வருவதாலும், முகக்கவசம் அணியாமல் சுற்றித்திரிவதாலும் பாதிப்பு எண்ணிக்கை உயர்கிறது. எனவே பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பில் சுகாதார துறையினர் ஈடுபட்டு உள்ளனர். கோவை மாவட்டத்தை பொறுத்தவரை சூலூர், காரமடை, மாநகராட்சி ஆகிய பகுதிகளில்தான் கொரோனா பாதிப்பு அதிரித்து உள்ளது.
கடந்த வாரம் கோவை மாவட்டத்தில் மொத்த கொரோனா பாதிப்பில் மாநகராட்சியில் 41 சதவீதமும், ஊரக பகுதியில் 59 சதவீதமாகவும் இருந்தது. ஆனால் நேற்றைய நிலவரப்படி கோவை மாநகராட்சி பகுதியில் பாதிப்பு 50 சதவீதமாக உயர்ந்து உள்ளது. மாநகராட்சி பகுதியில் வடக்கு, மேற்கு, கிழக்கு ஆகிய மண்டலங்களில் பாதிப்பு அதிகரித்து உள்ளது. தெற்கு மற்றும் மத்திய மண்டலத்தில் மட்டும் பாதிப்பு அதிகரிக்காமல் உள்ளது.
ஊரக பகுதிகளை பொறுத்தவரை காரமடையில் 7 சதவீதமாகவும், சூலூரில் 8 சதவீதமாகவும், மதுக்கரை மற்றும் துடியலூரில் தலா 5 சதவீதமாக பாதிப்பு உள்ளது. இந்த பகுதிகளில் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணிகளை சுகாதார துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் கோவை மாவட்டத்தில் கடந்த வாரம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 45 -க்கு கீழ் இருந்தது. தற்போது அது 50 ஆக உயர்ந்து உள்ளது. இதில் மாநகராட்சியில் 27 இடங்களும், சூலூர், காரமடையில் தலா 5 இடங்களும் உள்ளன.
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பரிசோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கோவையில் தினமும் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் மாநகராட்சி பகுதியில் மட்டும் 6 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் விரைந்து தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
முகக்கவசம் அணியாதவர்கள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகள் உள்ளிட்ட இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
-
Related Tags :
Next Story