தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே சாலையோர கடைகளை இடிக்க நீலமேகம் எம்.எல்.ஏ. எதிர்ப்பு
தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாகஇருப்பதாக கூறி சாலையோர கடைகளை இடிப்பதற்கு மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் வந்தனர். இதற்கு டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ. எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர்,
தஞ்சை பழைய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.14 கோடியே 65 லட்சம் செலவில் கட்டப்பட்டு பணிகள் முடிவடைந்து விட்டது. விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படும் என தெரிகிறது. இந்த பஸ் நிலையத்தில் 4 வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்கு பகுதியில் 2 வாயில்களும், கிழக்குப்பகுதியில் 2 வாயில்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பஸ் நிலையத்தை சுற்றிலும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் மாநகராட்சியால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பஸ் நிலையத்திற்கு மேற்கு பகுதியில் உள்ள சாலையோரத்தில் சிற்றுண்டி உணவகம், பழக்கடைகள் என 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
இந்த கடைகளால் பஸ் நிலையத்திற்கு வரும் பஸ்களால் சிரமம் ஏற்படக்கூடாது என கருதி சாலையோர கடைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்தனர். பொக்லின் எந்திரமும் அங்கு வரவழைக்கப்பட்டு கடைகள் முன்பு போடப்பட்டு இருந்த சிமெண்டு தளங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.மேலும் கடைகளில் இருந்த தட்டு வண்டிகள் மற்றும் பொருட்களை வியாபாரிகள் இடமாற்றினர். இந்த நிலையில் தஞ்சை தொகுதி எம்.எல்.ஏ. நீலமேகம் அங்கு வந்து பணிகளை நிறுத்துமாறு கூறினார். மேலும் கடைகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், இந்த கடைகள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. இதற்கு பேசி தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்வேன் என தெரிவித்தார்.
மேலும் கடைகள் இருந்த இடத்திலேயே நாற்காலியை போட்டு சிறிது நேரம் நீலமேகம் அமர்ந்து இருந்தார். இதையடுத்து இடிக்கும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. மேலும் மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் அங்கிருந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.
கடைகள் இடிக்கப்படுவதையொட்டி அங்கு நகர துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ராஜதுரை, இன்ஸ்பெக்டர்கள் ஸ்ரீதேவி, ஸ்ரீதர், போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
Related Tags :
Next Story