திட்டக்குடி அருகே ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது


திட்டக்குடி அருகே ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 30 July 2021 9:45 PM IST (Updated: 30 July 2021 9:45 PM IST)
t-max-icont-min-icon

திட்டக்குடி அருகே ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கடலூர், 

குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வுதுறை கூடுதல் இயக்குனர் ஆபாஷ்குமார் உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜான்சுந்தர் ஆகியோரது அறிவுறுத்தலின்படி குடிமைப்பொருள் வழங்கல் குற்றபுலனாய்வு துறை போலீசார் திட்டக்குடி அடுத்த கொரக்கவாடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வாகனத்தை மறித்து சோதனையிட்டனர். அதில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சரக்கு வாகனத்தில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கொரக்கவாடி பகுதியை சேர்ந்த கருப்பையா (வயது 25), பன்னீர்செல்வம் (28) என்பதும், கடலூரில் இருந்து சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு 7,140 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி சென்றதும் தெரியவந்தது.

குண்டர் சட்டம்

இதையடுத்து அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பையா, பன்னீர்செல்வம் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களது தொடர் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொரு ட்டு, 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் கலெக்டர் பாலசுப்பிரமணியம், ரேஷன் அரிசி கடத்திய கருப்பையா, பன்னீர்செல்வம் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கருப்பையா, பன்னீர்செல்வம் ஆகியோரிடம், அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

Next Story