ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
ஊட்டியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. இதில் ரூ.15 லட்சம் தப்பியது.
ஊட்டி
ஊட்டியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. இதில் ரூ.15 லட்சம் தப்பியது.
ஏ.டி.எம். மையம்
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள வால்சம்பர் சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனருகில் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த நிலையில் நேற்று காலையில் வங்கிக்கு வந்த ஊழியர்கள் ஏ.டி.எம். மையத்தில் உள்ள எந்திரத்தின் கீழ்பகுதி வெல்டிங் எந்திரத்தால் உடைக்கப்பட்டு, இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே மேலாளருக்கு, அவர்கள் தகவல் கொடுத்தனர். அவர், ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
போலீசார் ஆய்வு
அப்போது ஏ.டி.எம். மையத்தின் உள்பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா செயல்படாமல் இருப்பது தெரியவந்தது. பின்னர் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, ஏ.டி.எம். மையத்தில் பதிவாகி இருந்த கைரேகைகள் சேகரிக்கப்பட்டது.
தொடர்ந்து வங்கி அருகில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் சந்தேக நபர்கள் நடமாட்டம் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்தனர்.
பணம் தப்பியது
அதன்பின்னர் போலீசார் கூறியதாவது:- அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.15 லட்சம் இருந்து உள்ளது. அதை வெல்டிங் எந்திரம் மூலம் உடைத்து, பணத்தை கொள்ளையடிக்க மர்ம ஆசாமிகள் முயன்று உள்ளனர். ஆனால் லாக்கரை உடைக்க முடியாததால், ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்றுவிட்டனர். இதனால் அந்த பணம் தப்பியது.
தனிப்படை
அந்த ஆசாமிகளை பிடிக்க நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உத்தரவின்படி ஊட்டி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். ஊட்டியில் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story