கெலமங்கலம் வனப்பகுதியில் யானை தாக்கி முதியவர் பலி


கெலமங்கலம் வனப்பகுதியில் யானை தாக்கி முதியவர் பலி
x
தினத்தந்தி 30 July 2021 5:14 PM GMT (Updated: 30 July 2021 5:14 PM GMT)

கெலமங்கலம் வனப்பகுதியில் மாடு மேய்க்க சென்ற முதியவர் யானை தாக்கி உயிரிழந்தார்.

ராயக்கோட்டை:
கெலமங்கலம் வனப்பகுதியில் மாடு மேய்க்க சென்ற முதியவர் யானை தாக்கி உயிரிழந்தார். 
முதியவர்
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள பேவநத்தம் நார்ப்பனட்டி கிராமத்தை சேர்ந்தவர் பஜ்ஜப்பா (வயது 70). விவசாயியான இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் பஜ்ஜப்பா மாடுகளை கிராமத்தின் அருகேயுள்ள வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றார்.  மாலை வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. 
இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் வனப்பகுதிக்கு சென்று அவரை தேடினர். அப்போது பஜ்ஜப்பா வனப்பகுதியில் யானை தாக்கி இறந்து கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து ராயக்கோட்டை வனத்துறையினருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனச்சரகர் நாகராஜன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.
நிதி உதவி
பின்னர் பஜ்ஜப்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வனப்பகுதிக்கு மாடு மேய்க்க சென்ற முதியவர் யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
யானை தாக்கி இறந்த விவசாயி பஜ்ஜப்பாவுக்கு தமிழக அரசு சார்பில் முதல்கட்ட நிவாரண நிதி ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை அவரது மகன் பைரப்பாவிடம் ஓசூர் உதவி வனப்பாதுகாவலர் கார்த்திகேயினி வழங்கினார். அப்போது ராயக்கோட்டை வனச்சரகர் நாகராஜன் மற்றும் வன ஊழியர்கள் உடன் இருந்தனர்.

Next Story