கோவேக்சின் 2-வது தவணை செலுத்த முடியாமல் மக்கள் அவதி
குறைந்த அளவிலேயே கோவேக்சின் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்படுவதால் 2-வது தவணை தடுப்பூசி செலுத்த முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். டோக்கன் வாங்க அதிகாலையிலேயே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
தஞ்சாவூர்:
குறைந்த அளவிலேயே கோவேக்சின் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்படுவதால் 2-வது தவணை தடுப்பூசி செலுத்த முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். டோக்கன் வாங்க அதிகாலையிலேயே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
கொரோனா தடுப்பூசி
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 வகையான தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. கோவிஷீல்டு தடுப்பூசி முதல் தவணை செலுத்தி கொண்டவர்கள் 84 நாட்களுக்கு பிறகும், கோவேக்சின் செலுத்தி கொண்டவர்கள் 28 நாட்களுக்கு பிறகும் 2-வது தவணை செலுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மக்கள் சிரமம்
முதல் தவணை செலுத்தி கொண்டவர்களின் காலஅவகாசம் முடிவடையும் தருணத்தில் சம்பந்தப்பட்ட நபரின் செல்போன் எண்ணுக்கு நினைவூட்டல் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. அப்படி குறுஞ்செய்தி வந்தவுடன் 2-amp;வது தவணை தடுப்பூசி எங்கே போடப்படுகிறது என மக்கள் கண்டறிந்து தடுப்பூசியை செலுத்தி கொள்கின்றனர். கோவிஷீல்டு தடுப்பூசி தட்டுப்பாடு இன்றி வருவதால் அந்த தடுப்பூசி 2-வது தவணை செலுத்தி கொள்பவர்கள் பெரும்பாலும் சிரமத்திற்கு ஆளாகுவது இல்லை.
ஆனால் கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு கோவேக்சின் தடுப்பூசி முதல் தவணையை செலுத்தி கொண்டவர்கள், தற்போது நிலவும் தடுப்பூசி தட்டுப்பாட்டால் 2-வது தவணை தடுப்பூசியை செலுத்த முடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனிடையே முதல் தவணை தடுப்பூசி போட்டு 28 நாட்கள் முடிந்தவர்களுக்கு அடுத்ததாக 2-வது தவணை செலுத்தி கொள்ள வேண்டும் என குறுஞ்செய்தி வந்தவுடன் அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சென்று கோவேக்சின் தடுப்பூசி வந்துவிட்டதா? என பலர் கேட்கின்றனர்.
டோக்கன் வாங்க
ஆனால் போதிய தடுப்பூசி இருப்பில் இல்லை என்றே பதில் வருகிறது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் 2-வது தவணை கோவேக்சின் தடுப்பூசிக்காக 28 நாட்களை கடந்து 2 வாரங்களாக காத்திருக்கின்றனர். காலம் கடந்து 2-வது தவணை தடுப்பூசி செலுத்தினால் எதிர்பார்த்த அளவு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்காதோ? என்றும் அச்சப்படுகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கோவேக்சின் தடுப்பூசி குறைந்தஅளவில் போடப்பட்டு வருகிறது.
தஞ்சை மாநகரில் தென்கீழ்அலங்கத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கோவேக்சின் 2-வது தவணை தடுப்பூசி நேற்று போடப்பட்டது. தடுப்பூசி போட வருபவர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த டோக்கன் வாங்குவதற்காக நேற்றுஅதிகாலை 3 மணி முதலே மக்கள் குவியத் தொடங்கினர். நேரம் ஆக, ஆக மக்கள் கூட்டம் அதிகமாகி கொண்டே இருந்தது. இவர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் காத்து இருந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் காத்திருந்ததால் முன்கூட்டியே டோக்கன் வினியோகம் செய்யும் பணியை மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டனர்.
எதிர்பார்ப்பு
இந்த மையத்திற்கு 250 தடுப்பூசி மட்டுமே ஒதுக்கப்பட்டதால் 250 டோக்கன் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டது. மற்றவர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் மக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். குறிப்பாக வயதானவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். எனவே கோவேக்சின் தடுப்பூசி அதிகஅளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கூடுதல் மையங்களில் கோவேக்சின் 2-வது தவணை தடுப்பூசி போட சுகாதாரத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாகும்.
Related Tags :
Next Story