கேரளாவில் இருந்து கர்நாடகத்திற்கு வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் - கலெக்டர் ராஜேந்திரா தகவல்
கேரளாவில் இருந்து கர்நாடகத்திற்கு வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளதாக தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டர் ராஜேந்திரா கூறினார்.
மங்களூரு:
கலெக்டர் ஆய்வு
கர்நாடகத்தில் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இந்த நிலையில் கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா 3-வது அலை உருவாகி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. இதன்காரணமாக கேரளாவில் இருந்து தட்சிண கன்னடா மாவட்டம் வழியாக கர்நாடகத்திற்குள் நுழையும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தவும், கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தவும் மாநில அரசு உத்தரவிட்டு இருக்கிறது.
அதன்பேரில் நேற்று மாவட்ட கலெக்டர் ராஜேந்திரா, மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிக்குமார் மற்றும் அதிகாரிகள் தட்சிண கன்னடா மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கேரளா-கர்நாடக எல்லையான தளப்பாடியில் அமைந்திருக்கும் சோதனைச்சாவடியில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் கலெக்டர் ராஜேந்திரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்
கேரளாவில் இருந்து தினமும் ஏராளமானோர் மருத்துவ உதவிக்காகவும், வேலை நிமித்தமாகவும், கல்விக்காகவும் தட்சிண கன்னடா மாவட்டம் வழியாக கர்நாடகத்திற்கு வருகிறார்கள். அவர்களை கண்காணிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் போட்டுள்ளவர்களுக்கும், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் உள்ளவர்களுக்கும் மட்டுமே தற்போது கர்நாடகத்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இதில் கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தட்சிண கன்னடாவில் தங்கி படிக்கும் கேரள மாணவ-மாணவிகளுக்கு கூடுதல் நிபந்தனைகள் விதிக்கப்பட உள்ளது. மாவட்டத்தில் ஒருநாள் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story