இடஒதுக்கீடு குறித்து பா.ஜனதா எங்களுக்கு பாடம் நடத்த தேவை இல்லை - சித்தராமையா அறிக்கை
இடஒதுக்கீடு குறித்து பா.ஜனதா எங்களுக்கு பாடம் நடத்த தேவை இல்லை என்று சித்தராமையா கூறியுள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இடஒதுக்கீடு
மருத்துவ கல்லூரிகளில் மத்திய அரசின் ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதை நான் வரவேற்கிறேன். அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, கடந்த 3-ந் தேதி பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதி மருத்துவ கல்லூரிகளில் இதர பிறப்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மத்திய அரசு இட ஒதுக்கீடு வழங்காததால் கடந்த 2017-ம் ஆண்டு முதல் இதுவரை 11 ஆயிரம் இடங்கள் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு கிடைக்கவில்லை என்பதை அவர் குறிப்பிட்டார். இதற்காக சோனியா காந்திக்கு நன்றி தெரிவிக்கிறேன். பா.ஜனதா ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான கட்சி என்பது எனக்கு தெரியும்.
பாடம் நடத்த தேவை இல்லை
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி இருந்தபோது இந்த இட ஒதுக்கீட்டை வழங்காதது ஏன் என்று பா.ஜனதா கேள்வி எழுப்பியுள்ளது. மன்மோகன்சிங் பிரதமராக இருந்தோது, மத்திய அரசின் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் தலித், பழங்குடியினர் மற்றும இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி கல்வி-வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. இந்த இட ஒதுக்கீட்டை அப்போது பா.ஜனதா எதிர்த்தது.
பா.ஜனதா கொள்கை ரீதியாக சமூகநீதி, இட ஒதுக்கீட்டிற்கு எதிரான கட்சி. பா.ஜனதா தற்போது அரசியல் நோக்கத்திற்காக இட ஒதுக்கீட்டை அறிவித்துள்ளது. இட ஒதுக்கீடு கேட்டு தமிழ்நாடு அரசு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு வருகிற 3-ந் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. அதனால் அதற்கு முன்னதாக மோடி அரசு இட ஒதுக்கீட்டை அறிவித்துள்ளது. பிரதமர் மோடியின் இந்த இட ஒதுக்கீட்டு நாடகத்திற்கு வருகிற உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் ஒரு காரணமாக இருக்கலாம். அதனால் இட ஒதுக்கீடு குறித்து பா.ஜனதா எங்களுக்கு பாடம் நடத்த தேவை இல்லை.
இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story