கல் குவாரி கிடங்கில் குளித்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி சாவு


கல் குவாரி கிடங்கில் குளித்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி சாவு
x
தினத்தந்தி 30 July 2021 8:35 PM GMT (Updated: 30 July 2021 8:35 PM GMT)

கல் குவாரி கிடங்கில் குளித்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.

தாயில்பட்டி, 
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா தெற்கு புதூரை சேர்ந்தவர் சண்முகையா. இவர் கேரளாவில் பால் வியாபாரம் செய்து வருகிறார்.  இவருடைய மனைவி தங்கம். இவர்களுடைய மகன் நிதிஷ் கண்ணன் (வயது 11). 6-ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் தங்கம் அக்கம்பக்கத்தினருடன், இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தார். அப்போது மகனையும் உடன் அழைத்து சென்றார். அப்போது வழியில் விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அருகே கீழ செல்லையாபுரத்தில் உள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் அனைவரும் ஓய்வு எடுத்தனர். 
அங்கு எதிரில் உள்ள கல்குவாரி கிடங்கில் உள்ள தண்ணீரில் பாத யாத்திரை வந்தவர்கள் சிலர் குளிக்கத்தொடங்கினர். 
வேறு சில சிறுவர்களும் குளிப்பதை பார்த்து நிதிஷ் கண்ணன், தானும் குளிக்க வேண்டும் என தாயாரிடம் கேட்டுள்ளான். உடனே தங்கம், கரையில் உட்கார்ந்து கொண்டு மகனை குளிக்கும் படி கூறினார். அப்போது கரையோரத்தில் உட்கார்ந்து குளித்த நிதிஷ் கண்ணன் எதிர்பாராதவிதமாக தண்ணீருக்குள் தவறி விழுந்து மூழ்கினான்.  உடனே அவனை அனைவரும் காப்பாற்ற முயன்றனர். இதுகுறித்து வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் காந்தையா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கல் குவாரி கிடங்கில் இறங்கி தேடினர்.  பின்னர் சிறுவனை சடலமாக மீட்டனர். இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராமசாமி வழக்குப்பதிவு செய்து சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பாதயாத்திரை சென்ற போது, தாயின் கண்முன்னே தண்ணீரில் மூழ்கி மகன் இறந்த சம்பவம் ேசாகத்தை ஏற்படுத்தியது. 

Related Tags :
Next Story