அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 30 July 2021 8:39 PM GMT (Updated: 30 July 2021 8:39 PM GMT)

ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைெபற்றது.

சாத்தூர், 
ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைெபற்றது. 
இருக்கன்குடி 
சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து அம்மனை தரிசிப்பது வழக்கம். 
அதன்படி ஆடி வெள்ளிக்கிழமையான நேற்று  அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்பட மாவட்டத்தின்  பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். 
அதிகாலை 4 மணி முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் நிர்வாக அலுவலர், செயல் அலுவலர் கருணாகரன் மற்றும் பரம்பரை அறங்காவலர் குழு உறுப்பினர் ராமமூர்த்தி, அறங்காவலர் குழு உறுப்பினர் பூசாரிகள், கோவில் பணியாளர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
வத்திராயிருப்பு 
வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு 18 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த கோட்டையூர் சக்தி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. தாயில்பட்டி பத்திரகாளியம்மன், பச்சையாபுரம்கழுவுடையம்மன், ஏழாயிரம் பண்ணையில் உள்ள நாடார் மகமைக்கு சொந்தமான பராசக்தி மாரியம்மன் கோவில், சீர்காட்சி பத்திரகாளி அம்மன் கோவில், அழகு பார்வதி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 
அருப்புக்கோட்டை 
அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன், புளியம்பட்டி ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் உள்பட பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. 
தளவாய்புரம் அருகே உள்ள இளந்திரை கொண்டான் ஏழு சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பத்திரகாளி அம்மன் கோவிலிலும் சிறப்பு பூஜை நடந்தது. இதேபோல மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

Next Story