காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு ரெயில்முன் பாய்ந்து என்ஜினீயரிங் மாணவி தற்கொலை - காதலன் தூக்கில் தொங்கிய பரிதாபம்
துமகூருவில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் என்ஜினீயரிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காதலனும் பெங்களூருவில் தூக்குப்போட்டு உயிரை மாய்த்து கொண்ட பரிதாபம் நடந்துள்ளது.
துமகூரு:
காதல்
துமகூரு மாவட்டம் கிரோஹள்ளி அருகே ரெயில்வே காலனியை சேர்ந்தவர் சந்தனா(வயது 21). இவர், தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் இறுதி ஆண்டு படித்து வந்தார். சந்தனாவின், அத்தை மகன் கார்த்திக்(24). இவர், பெங்களூரு யஷ்வந்தபுரத்தில் வசித்து வந்தார். இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.
அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையில், உறவுக்கார வாலிபரான கார்த்திக்கை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்ய விரும்புவதாகவும் சந்தனா தன்னுடைய தாயிடம் கூறியதாக தெரிகிறது.
மாணவி தற்கொலை
ஆனால் தற்போது என்ஜினீயரிங் படித்து வருவதால், காதலில் ஈடுபடக்கூடாது என்றும், படிப்பு முடிந்த பின்பு, திருமணத்தை பற்றி யோசிக்கலாம் என்றும் சந்தனாவிடம் அவரது தாய் சொன்னதாக கூறப்படுகிறது. மேலும் சந்தனா, கார்த்திக்கின் காதலுக்கு, சந்தனாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மனம் உடைந்து சந்தனா வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள தண்டவாளத்திற்கு சென்ற சந்தனா, அந்த வழியாக வந்த ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தங்களது மகளின் உடலை பார்த்து சந்தனாவின் பெற்றோர் கதறி அழுதார்கள்.
காதலன் உயிரை மாய்த்தார்
சந்தனா தற்கொலை செய்து கொண்டது பற்றி யஷ்வந்தபுரத்தில் வசிக்கும் கார்த்திக்கிற்கும் தகவல் கிடைத்தது. இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத போது கார்த்திக்கும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் யஷ்வந்தபுரம் போலீசார் விரைந்து சென்று கார்த்திக்கின் உடலை கைப்பற்றினர். பின்னர் அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது சந்தனாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாலும், தனது காதலி தற்கொலை செய்திருப்பதாலும் மனம் உடைந்த கார்த்திக் தன்னுடைய உயிரை மாய்த்து கொண்டது தெரியந்தது.
இந்த சம்பவங்கள் குறித்து துமகூரு ரெயில்வே போலீஸ் மற்றும் யஷ்வந்தபுரம் போலீசார் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story