விஷம் வைத்து 60 குரங்குகள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இந்தி நடிகர் கண்டனம்


விஷம் வைத்து 60 குரங்குகள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இந்தி நடிகர் கண்டனம்
x
தினத்தந்தி 31 July 2021 2:16 AM IST (Updated: 31 July 2021 2:16 AM IST)
t-max-icont-min-icon

ஹாசன் அருகே விஷம் வைத்து 60 குரங்குகள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இந்தி நடிகர் ரன்தீப் ஹூடா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் மனிதநேயமற்ற செயலை செய்தவர்களுக்கு கடும் தண்டனை வழங்கவும் வலியுறுத்தியுள்ளார்.

ஹாசன்:

60 குரங்குகள் செத்தன

  கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா அருகே பேகூர் கிராஸ் ரோட்டில் உள்ள காட்டுப் பகுதியில் கடந்த 28-ந்தேதி 60 குரங்குகள் செத்த நிலையில் பிணமாக கிடந்தன. மேலும் உயிருக்கு போராடிய நிலையில் 14 குரங்குகளும் கிடந்தன.

  இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், உயிருக்கு போராடிய 14 குரங்குகளை மீட்டு வனத்துறையினர் உதவியுடன் சிகிச்சை அளித்தனர். அதனால் அந்த குரங்குகள் உயிர் பிழைத்தன. அதுபோல் இறந்துபோன குரங்குகளின் உடல்கள் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டன. அப்போது விஷம் வைத்து 60 குரங்குகள் கொல்லப்பட்டது தெரியவந்தது.

இந்தி நடிகர் கண்டனம்

  இதனால் அந்தப் பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வாயில்லா ஜீவன்களான குரங்குகளை விஷம் வைத்த கொன்ற கயவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் ஆத்திரமடைந்தனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

  இந்த நிலையில் பிரபல இந்தி நடிகரான ரன்தீப் ஹூடா, விஷம் வைத்து குரங்குகள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன் தனது டுவிட்டர் பக்கத்தில் செத்துப்போன குரங்குகள் தொடர்பான வீடியோக்களை பதிவிட்டு, சில கருத்தையும் கூறியுள்ளார்.

கடும் தண்டனை வழங்க...

  அதில், இது ஒரு மிகவும் மோசமான சம்பவம். கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா அருகே பேகூர் கிராஸ் ரோடு பகுதியில் விஷம் வைத்து கொல்லப்பட்ட நிலையில் 60-க்கும் மேற்பட்ட குரங்குகள் கிடந்தன. இது மனிதநேயமற்ற காட்டுமிராண்டிதனமான செயல். 

இந்த கொடூர செயலில் ஈடுபட்ட நபர்களை கண்டுபிடித்து கடும் தண்டனை வழங்க கர்நாடக முதல்-மந்திரி மற்றும், மத்திய, மாநில வனத்துறை மந்திரிகளுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story