அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 31 July 2021 2:23 AM IST (Updated: 31 July 2021 2:23 AM IST)
t-max-icont-min-icon

அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அரியலூர்:

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இந்நிலையில் ஆடி மாத 2-ம் வெள்ளிக்கிழமையையொட்டி அரியலூர் மாவட்டத்தில் அம்மன் கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. அரியலூர் நகரில் உள்ள அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலத்தெருவில் உள்ள கோவிலில் பெரியநாயகி அம்மன் ஒரு டன் காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு காட்சி அளித்தார். படை பத்து மாரியம்மன் கோவிலில் பழங்கள் அலங்காரத்தில் அம்மன் காட்சி தந்தார். பக்தர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. ஒப்பில்லாத அம்மன், பிள்ளையார் கோவில் தெரு, பூக்காரத் தெரு ஆகிய தெருக்களில் உள்ள மாரியம்மன் கோவில்கள், அண்ணாநகர் காமாட்சி அம்மன் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.
அரியலூர் கபிரியேல் தெருவில் உள்ள மகாகாளியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
விக்கிரமங்கலம் அருகே குணமங்கலம் கிராமத்தில் உள்ள பழமையான, பிரசித்தி பெற்ற கரும்பாயிரம் சுவாமி மலைக்கோவிலுக்கு, அரியலூர், நாகை, தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து பக்தர்கள், அதிகம் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். கோவிலில் ஆடி 2-ம் வெள்ளியான நேற்று கரும்பாயிரம் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், திரவியப்பொடி, இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் வஸ்திரம் சாத்தப்பட்டு, மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். பலர் நேர்த்திக்கடன் செலுத்தினர். அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் மற்றும் துர்க்கை அம்மனுக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவியப்பொடி, வில்வப்பொடி, அருகம்புல்பொடி, பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விசாலாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. மேலும் தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

Next Story