ஆடி 2-வது வெள்ளியையொட்டி சேலத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம்


ஆடி 2-வது வெள்ளியையொட்டி சேலத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 31 July 2021 2:39 AM IST (Updated: 31 July 2021 2:39 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் ஆடி 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

சேலம்,
சிறப்பு வழிபாடு
தமிழகத்தில் ஆடி மாதம் முழுவதும் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதிலும், குறிப்பாக ஆடி மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களில் கோவில்களில் மக்களின் கூட்டம் அதிகமாக காணப்படும்.
இந்த நிலையில், சேலம் மாநகரில் நேற்று ஆடி 2-வது வெள்ளிக்கிழமையை யொட்டி பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. அதன்படி, சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் முககவசம் அணிந்து வருமாறு கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
அம்மனுக்கு தங்ககவசம்
இதேபோல், சேலம் குமாரசாமிப்பட்டி எல்லைப்பிடாரியம்மன் கோவிலில் ஆடி 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி கவசம் சாத்தப்பட்டிருந்தது. இதையொட்டி நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். மேலும், ஒருசிலர் அம்மனுக்கு சர்க்கரை பொங்கல் உள்ளிட்ட பிரசாதங்கள் படைத்து அதை பக்தர்களுக்கு வினியோகம் செய்தனர். 
அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவிலில் நேற்று அம்மன் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அஸ்தம்பட்டி, மணக்காடு, அழகாபுரம், சின்னதிருப்பதி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்தனர். அன்னதானப்பட்டியில் உள்ள தண்ணீர் பந்தல் காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
குகை
இதேபோல் செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவில், அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவில், குகை காளியம்மன், மாரியம்மன் கோவில், அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவில், சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன், காளியம்மன் கோவில், அய்யந்திருமாளிகை மாரியம்மன் கோவில் உள்பட மாநகரில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஆடி 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி அந்தந்த பகுதிகளில் உள்ள பக்தர்கள் கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.


Next Story