சேலத்தில் 2 இடங்களில் அதிரடி சோதனை: லாரிகளில் பதுக்கிய ரூ.1¼ கோடி குட்கா பொருட்கள் பறிமுதல் தப்பி சென்ற கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
சேலத்தில் 2 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது லாரிகளில் பதுக்கிய ரூ.1¼ கோடி குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பி சென்ற கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சேலம்
குட்கா பொருட்கள்
தமிழகம் முழுவதும் குட்கா பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. சேலம் மாவட்டத்திலும் போலீசார் மற்றும் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி குட்கா பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக சேலம் மாநகர போலீசார் தனிப்படை அமைத்து பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி குட்கா விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் சீலநாயக்கன்பட்டி பகுதியில் லாரியில் குட்கா பொருட்கள் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் வெங்கடேசன் தலைமையில் அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜான் கென்னடி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், செல்லப்பன் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை சீலநாயக்கன்பட்டி பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
போலீசார் அதிர்ச்சி
அப்போது ஊத்துக்காட்டில் லாரிகள் நிறுத்தத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தப்பட்டு இருந்தன. அதில் ஒவ்வொரு லாரியாக போலீசார் சோதனையிட்டனர். அதில் 2 லாரிகளில் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. மூட்டைகளை பிரித்து என்னவென்று பார்த்தபோது போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவை அனைத்தும் குட்கா பொருட்கள் அடங்கிய மூட்டைகள்.
உடனே போலீசார் 2 லாரிகளில் இருந்த 248 மூட்டைகளை பறிமுதல் செய்தனர். அவை மொத்தம் 7 ஆயிரத்து 300 கிலோ குட்கா பொருட்கள் என்பதும், அதன் மதிப்பு ரூ.1 கோடி என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். லாரியை போலீசார் சோதனையிட்டதை அறிந்த லாரியின் டிரைவர்கள் மற்றும் குட்கா பதுக்கிய கும்பல் தப்பி சென்றது. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
கும்பல் தப்பி ஓட்டம்
இதேபோன்று சேலம் அம்மாபேட்டை மிலிட்டரி ரோடு பகுதியில் போலீஸ் உதவி கமிஷனர் ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் நேற்று காலை வாகன சோதனை நடத்தினர். அப்போது சிலர் அங்கு சாலையோரம் நிறுத்தி இருந்த லாரியில் இருந்து மூட்டைகளை வேனில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.
போலீசார் அவர்களிடம் மூட்டைகளில் என்ன உள்ளது? என்று கேட்டனர். அதற்கு அந்த நபர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததுடன் அங்கிருந்து நைசாக தப்பி செல்ல முயன்றனர். அப்போது போலீசாருக்கும், அந்த நபர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில் ஒருவர் போலீசாரிடம் சிக்கினார். மற்றவர்கள் தப்பி சென்றனர்.
ரூ.35 லட்சம் மதிப்பு
பின்னர் அங்கிருந்த லாரி, வேனில் இருந்த மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் இருந்த 72 மூட்டைகளிலும் 2 ஆயிரத்து 397 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது. அதன் மதிப்பு ரூ.35 லட்சம் என கூறப்படுகிறது.
உடனே போலீசார் அந்த வேன், லாரியை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய கும்பல் குறித்து பிடிபட்டவரிடம் விசாரித்து வருகிறார்கள்.
குண்டர் சட்டம் பாயும்
பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் அனைத்தும் சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்தது. நேற்று மதியம் போலீஸ் கமிஷனர் நஜ்மல்ஹோடா அன்னதானப்பட்டி போலீஸ் நிலையம் வந்தார். அங்கு வைக்கப்பட்டு இருந்த குட்கா பொருட்களை பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், குட்கா பொருட்கள் கடத்தி வந்தவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. சீலநாயக்கன்பட்டி பகுதியில் லாரி நிறுத்தும் இடத்தின் உரிமையாளர்கள் 2 பேரிடம், எந்தெந்த பகுதியில் இருந்து லாரிகள் இங்கு வருகிறது என்பது குறித்தும், 2 லாரிகளின் பதிவெண் மூலம் உரிமையாளர்கள், டிரைவர்கள் விவரங்களை சேகரித்து வருகிறோம். விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம். மேலும் குட்கா, கஞ்சா, லாட்டரி விற்பவர்கள், சாராயம் காய்ச்சுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்றார்.
பரபரப்பு
சேலம் மாநகரில் தொடர்ந்து குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் 2 இடங்களில் ரூ.1 கோடியே 35 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story