கூட்ட நெரிசலை தடுக்க பழனி மலைக்கோவில் மின்இழுவை ரெயில் நிலையத்தில் புதிய நடைமுறை காத்திருப்பு அறையில் பக்தர்கள் அமர ஏற்பாடு


கூட்ட நெரிசலை தடுக்க பழனி மலைக்கோவில் மின்இழுவை ரெயில் நிலையத்தில் புதிய நடைமுறை  காத்திருப்பு அறையில் பக்தர்கள் அமர ஏற்பாடு
x
தினத்தந்தி 31 July 2021 8:20 PM IST (Updated: 31 July 2021 8:20 PM IST)
t-max-icont-min-icon

கூட்ட நெரிசலை தடுக்க பழனி மலைக்கோவில் மின்இழுவை ரெயில் நிலையத்தில் புதிய நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி காத்திருப்பு அறையில் பக்தர்கள் அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


பழனி:
உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் விசேஷம் மற்றும் வார விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் உள்ளது. தற்போது கொரோனா பரவல் அச்சுறுத்தலால் பக்தர்கள் யானைப்பாதை வழியாக சென்று படிப்பாதை வழியாக திரும்பி வரும் வகையில் ஒருவழிப்பாதை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மின்இழுவை ரெயிலை பயன்படுத்தியும் பக்தர்கள் சென்று வருகின்றனர். மின்இழுவை ரெயிலில் செல்ல அடிவாரம் மற்றும் மலைக்கோவிலில் உள்ள நிலையத்தில் பக்தர்கள் டிக்கெட் எடுத்து வெகுநேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. இதில் அடிவாரத்தில் உள்ள ரெயில்நிலையத்தில் பக்தர்கள் அமர்வதற்கு இருக்கைகள் உள்ளன. ஆனால் மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்ட நெரிசலோடும், சமூக இடைவெளியின்றியும்  வரிசையில் நிற்க வேண்டிய சூழல் இருந்தது. இதை தடுக்க கோவில் நிர்வாகம் சார்பில் தற்போது புதிய நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது மலைக்கோவிலில் இருந்து மின்இழுவை ரெயில் மூலம் கீழே இறங்கும் பக்தர்கள் டிக்கெட் எடுத்து வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை. மாறாக அன்னதான மண்டபத்தில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் அமர்வதற்கு காத்திருப்பு அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மின்இழுவை ரெயில் வந்ததும் குறிப்பிட்ட நேர இடைவெளியில் பக்தர்கள் சீராக மலைக்கோவிலில் உள்ள ரெயில்நிலையத்துக்கு அனுப்பப்படுகின்றனர். பின்னர் அங்கிருந்து பக்தர்கள் கீழே இறக்கப்படுகின்றனர். இதனால் வரிசையில் நிற்பதும், கூட்ட நெரிசலும் தவிர்க்கப்படும் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.



Next Story