புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்
புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று உரிமை கரங்கள் ஓட்டுனர் தொழிற்சங்க மாநில தலைவர் ஜெயராஜ் கூறினார்.
திண்டுக்கல்:
உரிமை கரங்கள் ஓட்டுனர் தொழிற்சங்கத்தின் திண்டுக்கல் கிளை சார்பில் கலந்தாய்வு கூட்டம் திண்டுக்கல் தனியார் மண்டபத்தில் நடந்தது. இதற்கு மாநில தலைவர் ஜெயராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது, அரசின் விதிமுறைகளை பின்பற்றி வாடகை வாகனங்களை இயக்கி வருகிறோம்.
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும் எங்களால் வாடகையை உயர்த்த இயலவில்லை. எனவே அரசு அடிப்படை கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். ஓட்டுனர்களுக்கான நலவாரியத்தில் பதிவு செய்யும் முறையை எளிமைப்படுத்த வேண்டும்.
சுங்கச்சாவடிகளில் ஓட்டுனர்களை மரியாதை இன்றி நடத்துகின்றனர். அவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வாடகை கார் ஓட்டுனர்கள் மீது போலீசார் பொய் வழக்கு போட்டு அபராதம் விதிக்கின்றனர்.
அந்த அபராத தொகையை இணையதளம் மூலமே செலுத்த வேண்டியுள்ளது. இணையதளத்தை பயன்படுத்தும் முறை குறித்து ஓட்டுனர்களுக்கு தெரிவதில்லை. எனவே அதுகுறித்த பயிற்சியை ஓட்டுனர்களுக்கு அரசு அளிக்க வேண்டும்.
சொந்த வாகனத்தை வாடகைக்கு பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய மோட்டார் வாகன சட்டத்தால் வாடகை வாகன ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்.
எனவே அதனை ரத்து செய்ய வேண்டும். தேர்தல் பணிக்காகவும், அரசு அலுவலக பயன்பாட்டுக்காகவும் பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கான வாடகை தொகை இதுவரை செலுத்தப்படாமல் உள்ளது. நிலுவையில் உள்ள தொகையை உடனடியாக செலுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
--------
Related Tags :
Next Story