போலி விதைகளை தடுக்க வேளாண்மை துறை மூலமாக சின்னவெங்காய விதைகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை


போலி விதைகளை தடுக்க வேளாண்மை துறை மூலமாக சின்னவெங்காய விதைகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை
x
தினத்தந்தி 31 July 2021 9:02 PM IST (Updated: 31 July 2021 9:02 PM IST)
t-max-icont-min-icon

போலி விதைகளை தடுக்க வேளாண்மை துறை மூலமாக சின்னவெங்காய விதைகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்கோரிக்கைறு விவசாயிகள் கலெக்டரிடம்

திருப்பூர்:
போலி விதைகளை தடுக்க வேளாண்மை துறை மூலமாக சின்னவெங்காய விதைகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.
உப்பாறு அணைக்கு தண்ணீர்
திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காணொலிக்காட்சி மூலமாக நடைபெற்றது. திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் வினீத் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அந்தந்த வட்டார வேளாண்மை அலுலகத்தில் விவசாயிகள் காணொலிக்காட்சி மூலமாக இணைந்து மனுக்களை அளித்தனர். முந்தைய கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்தும், மனுக்கள் மீது காலதாமதம் இல்லாமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். நேற்று 84 மனுக்கள் அளிக்கப்பட்டது.
கூட்டத்தில் தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் காளிமுத்து மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தாராபுரம் அருகே உப்பாறு அணைக்கு உயிர்த்தண்ணீர் வழங்க வேண்டும். பி.ஏ.பி.நீர்ப்பிடிப்பு பகுதியில் நல்ல மழை பெய்கிறது. தற்போது 4-வது மண்டலத்துக்கு தண்ணீர் திறப்பு நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. உப்பாறு அணைக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு ஒரு நிரந்தர தீர்வாக அரசூர் ஷட்டரில் இருந்து உப்பாறு அணை வரை குழாய் மூலமாக தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அமராவதி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையில் இருந்து உபரிநீர் திறக்கும் போது அவை வீணாக ஆற்றில் கலக்கிறது. நாட்டுக்கல்பாளையத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாய்க்கால் வெட்டினால் உப்பாறு அணைக்கு தண்ணீர் கிடைக்கும். உப்பாறு அணைக்கு நீர் வர ஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும்.
ஊரக வளர்ச்சி வங்கி
காங்கேயம், வெள்ளகோவில் பி.ஏ.பி. கடைமடை பகுதிகளில் இருக்கும் விவசாய நிலங்களுக்கு 7 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு, 7 நாட்கள் அடைப்பு என்ற முறையில் தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால் 3 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் கடைமடை விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். 7 நாட்கள் தண்ணீர் திறப்பை உறுதி செய்ய வேண்டும். தாராபுரம், மூலனூர், குண்டடம் ஒன்றிய பகுதியில் மும்முனை மின்சாரம் நாளொன்றுக்கு 1 மணி நேரத்துக்கு மேலாக தடைபட்டு வருகிறது. இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதை சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நல சங்கத்தின் தலைவர் பொன்னுச்சாமி மற்றும் விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் கூட்டுறவு தொடக்க வேளாண்மை ஊரக வளர்ச்சி வங்கி திருப்பூர், பல்லடம், பொங்கலூர் பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்காக உருவாக்கப்பட்டது. 10 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். இந்த வங்கியில் விவசாயிகளுக்கு கறவை மாடுகள் வாங்க, டிராக்டர்கள் வாங்க, விசைத்தறி குடோன் அமைக்க கடன் வழங்கப்பட்டது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு கடன் வழங்குவதில்லை. நகைக்கடன் மட்டுமே வழங்கப்படுகிறது. மற்ற கடன்கள் கிடைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பயிர்க்கடன்
கிராம தொடக்க வேளாண்மை வங்கிகளில் சென்ற ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த ஆண்டு விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பயிர்க்கடனை மீண்டும் வழங்க வேண்டும். சின்னாண்டிப்பாளையத்தில் இருந்து ராஜகணபதிநகர் வரை 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு மண் பாதை உள்ளது. இது மாநகராட்சியையும், மங்கலம் கிராமத்தையும் இணைக்கும் சாலை. இந்த மண் பாதையை தார் சாலையாக மாற்ற ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
ஏர்முனை இளைஞர் அணியினர் அளித்த மனுவில்,  தனியார் நிறுவனங்கள் போலி சின்னவெங்காய விதைகளை கொடுத்து ஏமாற்றி வருகிறது. இதை வாங்கி விவசாயிகள் பெரிதும் நஷ்டம் அடைந்துள்ளனர். வேளாண்மை துறையின் மூலமாக சின்னவெங்காய விதை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பொங்கலூர், குண்டடம் பகுதியில் சின்னவெங்காய சாகுபடி அதிகமாக உள்ளது. சாகுபடி பரப்பை அதிகாரிக்க ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் பின்னேற்பு மானியமாக வழங்க வேண்டும். திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. கடைமடை வரை தண்ணீர் கிடைக்கவும், தண்ணீர் திருட்டை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
முன்னதாக வேளாண் உற்பத்திக்குழு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இணை இயக்குனர் (வேளாண்மை) மனோகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மகாதேவன், துணை கலெக்டர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story