குடிநீர்குழாய் பதிக்க தோண்டப்பட்ட சாலை


குடிநீர்குழாய் பதிக்க தோண்டப்பட்ட சாலை
x
தினத்தந்தி 31 July 2021 9:04 PM IST (Updated: 31 July 2021 9:04 PM IST)
t-max-icont-min-icon

குடிநீர்குழாய் பதிக்க தோண்டப்பட்ட சாலை

போடிப்பட்டி:
உடுமலையிலிருந்து குமரலிங்கம் வழியாக பழனி செல்லும் சாலையில் தினசரி அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் ஆனைமலை, அமராவதி போன்ற பகுதிகளுக்கு செல்லும் முக்கிய வழித்தடமாகவும் இது உள்ளது. அதேநேரத்தில் குமரலிங்கம் பஸ் நிலையத்தை ஒட்டிய சாலை மிகவும் குறுகலாக உள்ளதால் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த சாலையில் குடிநீர்க் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றது. இதற்கென தார் சாலை உடைக்கப்பட்டு பள்ளங்கள் தோண்டப்பட்டது.ஆனால் பணிகள் முடிந்ததும் மண்ணால் மூடப்பட்டுள்ள பள்ளங்கள் தற்போது அங்கங்கே குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த குறுகலான சாலையில் வாகனங்கள் செல்லும்போது வாகன ஓட்டிகள் மேடு பள்ளங்களால் அவதிப்படுவதுடன் புழுதி பறக்கிறது.இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுவது மட்டுமல்லாமல் அருகிலுள்ள வணிக நிறுவனங்களும் பாதிப்புக்குள்ளாகின்றன. மழைக்காலங்களில் ஒருசில இடங்களில் சேறும் சகதியுமாக மாறி விடுவதால் விபத்துக்கள் ஏற்படுகிறது. மேலும் பஸ் நிலையம் பகுதியில் பேரூராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இந்த பகுதியில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையை ஒட்டிய தார் சாலை தோண்டப்பட்டதால் அங்கு தற்போது மண்ணும் கற்களுமாக கிடக்கிறது. இதனால் வணிக வளாகத்திலுள்ள கடைகளுக்கு செல்லும் பொதுமக்கள் தடுமாறி விழும் நிலை ஏற்படுகிறது. அத்துடன் இந்த பகுதியில் பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள் பஸ்ஸை பிடிப்பதற்காக வேகமாக செல்லும்போது நிலைதடுமாறுகின்றனர். எனவே இந்த சாலையிலுள்ள பள்ளங்களை சீரமைத்து தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story