விளை நிலங்களை ஆக்கிரமித்து வளர்ந்து வருகின்ற பார்த்தீனியம் செடிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க மலைவாழ் மக்கள் கோரிக்கை


விளை நிலங்களை ஆக்கிரமித்து வளர்ந்து வருகின்ற பார்த்தீனியம் செடிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க  மலைவாழ் மக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 31 July 2021 9:09 PM IST (Updated: 31 July 2021 9:09 PM IST)
t-max-icont-min-icon

விளை நிலங்களை ஆக்கிரமித்து வளர்ந்து வருகின்ற பார்த்தீனியம் செடிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க மலைவாழ் மக்கள் கோரிக்கை

தளி:
வனப்பகுதியில் விளை நிலங்களை ஆக்கிரமித்து வளர்ந்து வருகின்ற பார்த்தீனியம் செடிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
வனப்பகுதி
உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு மூங்கில், தேக்கு, ஈட்டி, வெல்வேல், வெள்ளைநாகம், கருந்துவரை, கனும்பாளன், காட்டுஎலுமிச்சை, புளியன், கொடைவேலான் உள்ளிட்ட ஏராளமான மரங்கள் உள்ளன. அத்துடன் வனப்பகுதியை வாழ்வாதாரமாகக் கொண்டு யானை, புலி, செந்நாய், சிறுத்தை, புள்ளிமான், கடமான், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, கரடி, கருமந்தி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
 அவை உணவு மற்றும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளை சார்ந்துள்ளன.மேலும் வனப்பகுதியை ஆதாரமாகக்கொண்டு மேல்குருமலை, குருமலை, குளிப்பட்டி, மாவடப்பு, ஆட்டுமலை, ஈசல்தட்டு, கோடந்தூர், தளிஞ்சி, தளிஞ்சிவயல், பொருப்பாறு, பூச்சகொட்டான்பாறை, கருமுட்டி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள். வனப்பகுதியில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது.
பார்த்தீனியம் செடிகள்
ஆனால் சாகுபடி பணிகளுக்கு இடையூறாக வனப்பகுதியில் உள்ள விளை நிலங்களை ஆக்கிரமித்து பார்த்தீனியம் செடிகள் வளர்ந்து வருகிறது. இதன் காரணமாக பயிர்கள் போதிய வளர்ச்சி அடையாமல் விளைச்சல் குறைந்து வருவதாக தெரிகிறது. இதனால் விவசாய தொழிலில் வருமானம் ஈட்ட முடியாத சூழல் நிலவுவதாக மலைவாழ் மக்கள் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
பார்த்தீனியம் செடிகள் மலைப்பகுதியில் உள்ள விளைநிலங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளை ஆக்கிரமித்து வளர்ந்து வருகிறது. இந்த செடிகள் மண்ணில் உள்ள ஈரப்பதம் மற்றும் இயற்கையான சத்துக்களை கொண்டு எந்தவிதமான பராமரிப்பும் இன்றி தானாகவே வளர்ந்து வருகிறது. முதிர்ச்சியடைந்த ஒரு செடியில் இருந்து ஏராளமான விதைகள் உற்பத்தி ஆவதால் அவற்றின் எண்ணிக்கையும் வளர்ச்சியும் நாளுக்குநாள் அசுரத்தனமாக உள்ளது.
சாகுபடிபணி பாதிப்பு
இதன் காரணமாக சாகுபடி செய்யப்பட்ட பயிர்களின் வளர்ச்சியும், விளைச்சலும் குறைந்து விடுவதால் விவசாய தொழிலில் வருமானத்தை ஈட்ட முடியவில்லை. இதையடுத்து பார்த்தீனியம் செடிகளை ஆற்றுவதற்கு முற்பட்டோம். ஆனால் அந்த செடிகள் சளி, காய்ச்சல், அரிப்பு, மூச்சுதிணறல் உள்ளிட்ட பல்வேறு விதமான தொற்றுநோய்களை தோற்றுவித்து விடுகிறது. இதனால் அதன் அருகில் சென்று அகற்றுவதற்கு அச்சமாக உள்ளது. மேலும் வனப்பகுதியில் உள்ள புற்கள் மற்றும் செடிகளுடன் வளர்ந்துள்ள பார்த்தீனியம் செடிகளை யானை மான் காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் தின்று விடுகின்றன. இதனால் வனவிலங்குகளுக்கு ஒவ்வாமை ஏற்படுவதற்கு சூழலும் நிலவுகிறது. மேலும் பார்த்தீனியம் செடிகள் பெரும்பாலும் நீரோடை பகுதிகளையே தேர்ந்தெடுத்து ஆக்கிரமித்து வளர்ந்து வருகிறது. இதனால் அதன் விதைகள் நீரின் மூலமாக வனப்பகுதியில் எளிதில் பரவி விடுகிறது.
நடவடிக்கை எடுக்கப்படுமா?
இதன் காரணமாக வனப்பகுதியில் வளர்ந்து வருகின்ற தாவரங்களின் வளர்ச்சி தடைபடுவதால் வனவிலங்குகளுக்கு தீவண தட்டுப்பாடும் ஏற்பட்டு விடுகிறது. எனவே வனப்பகுதியில் உள்ள விளை நிலங்களை ஆக்கிரமித்து வளர்ந்து வருகின்ற பார்த்தீனியம் செடிகளை முழுமையாக ஆற்றுவதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும். இதனால் விவசாய தொழிலில் கூடுதல் லாபத்தை ஈட்ட முடியும் வாழ்வாதாரமும் உயரும். இவ்வாறு தெரிவித்தனர்.

Next Story