பழனி முருகன் கோவிலில் 2 நாட்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை


பழனி முருகன் கோவிலில் 2 நாட்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை
x
தினத்தந்தி 31 July 2021 9:12 PM IST (Updated: 31 July 2021 9:19 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பழனி முருகன் கோவிலில் நாளை, நாளை மறுநாள் என 2 நாட்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


பழனி:
அறுபடை வீடுகளில், 3-ம் படைவீடாக பழனி முருகன் கோவில் திகழ்கிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். 
கொரோனா 2-ம் அலை காரணமாக கடந்த சில மாதங்களாக பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். எனினும் கோவில் நுழைவு பகுதியில் பக்தர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் கொண்டு வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் காய்ச்சல், சளி பாதிப்பு இருந்தால் அனுமதிக்கப்படுவதில்லை.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக-கேரள எல்லை பகுதிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதேவேளையில், தமிழகத்திலும் கொரோனா பரவலை தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வருகிற 9-ந்தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பொதுஇடங்களில் மக்கள் அதிகம் கூடுவதை தடுக்க அந்த பகுதியை மூட அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
2 நாட்கள் தரிசனத்துக்கு தடை
இந்நிலையில் நாளை (திங்கட்கிழமை) ஆடி மாத கார்த்திகை, நாளை மறுநாள் ஆடிப்பெருக்கு ஆகியவை கொண்டாடப்பட உள்ளது. இந்த நாட்களில் பழனி முருகன் கோவிலுக்கு சுற்று வட்டாரம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவார்கள். குறிப்பாக பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து பழனிக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். அதேபோல் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருவார்கள்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா பரவலை தடுக்க ஆடி மாத கார்த்திகை, ஆடிப்பெருக்கு ஆகிய நாட்களில் பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் அதிகம் கூடுவார்கள். எனவே கூட்டம் கூடுவதை தடுக்க 2-ந்தேதி(நாளை), 3-ந்தேதி (நாளை மறுநாள்) ஆகிய 2 நாட்கள் பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை. அதேவேளையில் கோவிலில் ஆகம விதிப்படி பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். எனவே மேற்கண்ட 2 நாட்களில் பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
முன்பதிவு
இதனிடையே பழனி கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 2-ந்தேதி, 3-ந்தேதிகளில் சாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்தவர்கள், அந்த சீட்டை பயன்படுத்தி வேறு தேதிகளில் தரிசனம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Next Story