குறுவை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு குறித்து தெளிவுபடுத்த வேண்டும்


குறுவை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு குறித்து தெளிவுபடுத்த வேண்டும்
x
தினத்தந்தி 31 July 2021 9:35 PM IST (Updated: 31 July 2021 9:35 PM IST)
t-max-icont-min-icon

குறுவை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தி உள்ளது.

திருக்காட்டுப்பள்ளி,

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் ஜூன் 16-ந் தேதி கல்லணையில் இருந்து அதன் கிளை ஆறுகளில் திறந்து விடப்பட்டது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு, நீர்வரத்து திருப்திகரமாக இருப்பதால் விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்போடும், நம்பிக்கையோடும் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விவசாயிகளின் நம்பிக்கைக்கு ஏற்ப தமிழக அரசு குறுவை தொகுப்பு திட்டத்தையும் அறிவித்து செயல்படுத்தி வருகிறது. தஞ்சையில் ஆய்வு கூட்டம் நடத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு ரூ.11,500 கோடி அளவிற்கு கடன் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதனால் மேலும் உற்சாகம் அடைந்த விவசாயிகள் மிக தீவிரமாக வேளாண் பணிகளை மேற்கொண்டு கடன் கேட்டு கூட்டுறவு சங்கங்களை நாடி சென்றனர்.

பல கூட்டுறவு சங்கங்களில் புதிய கடன் ஏதும் வழங்க வழியில்லை என்றும், பழைய கடன்களை புதுப்பித்து வழங்க இயலும் என்று தெரிவித்து விட்டதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். குறுவை தொகுப்பு திட்ட உரங்களை பெறுவதற்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கும், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களுக்கும், வேளாண் துறை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கும் விவசாயிகள் நடையாய் நடந்து வருகின்றனர்.

குறுவை தொகுப்பு உதவிகள் பெறுவதிலும் பல்வேறு இடர்பாடுகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். இதுபோன்ற ஒருநிலை தஞ்சை மாவட்டம் முழுவதும் இருந்தாலும் பூதலூர் ஒன்றிய பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் இந்த பிரச்சினையை சந்தித்து வருகிறார்கள்.

இது ெதாடர்பாக தஞ்சை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு் கட்சி செயற்குழு உறுப்பினர், வக்கீல் ஜீவக்குமார் தெரிவித்ததாவது:-

கூட்டுறவு சங்கங்களில் அரசு அறிவித்தது போல் புதிய கடன் பெறுவதிலும், பழைய கடன்கள் பெறுவதிலும் பல்வேறு சிரமங்களை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். பூதலூர் ஒன்றியம் ராஜகிரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் குறுவை சாகுபடிக்கு என 62 விவசாயிகளுக்கு ரூ.48 லட்சத்து 53 ஆயிரத்து 400 கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு கடன் தொகை அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. 62 விவசாயிகளுக்கும் தேவையான உரங்கள் இன்னும் வழங்கப்படவில்லை.

பூதலூர் ஒன்றிய பகுதியில் 12 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுவரை எந்த ஒரு விவசாயியிடம் இருந்தும் பயிர் காப்பீட்டு பிரீமிய தொகை வசூலிக்கப்படவில்லை. பயிர் காப்பீடு குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை அரசிடம் இருந்து வரவில்லை. இதுவும் விவசாயிகள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பயிர் காப்பீடு தொடர்பாக அரசு விவசாயிகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

எனவே தமிழக அரசும், தஞ்சை மாவட்ட நிர்வாகமும் உடனடியாக விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் போதுமான உரங்களை இருப்பு வைத்து வினியோகம் செய்வதற்கும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் அரசு அறிவித்தது போல புதிய கடன்கள் வழங்குவதற்கும், பயிர் காப்பீடு குறித்தும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story