ஸ்ரீமுஷ்ணம் அருகே டாஸ்மாக் கடையில் துளையிட்டு ரூ.1 லட்சம் மதுபாட்டில்கள் கொள்ளை


ஸ்ரீமுஷ்ணம் அருகே டாஸ்மாக் கடையில் துளையிட்டு ரூ.1 லட்சம் மதுபாட்டில்கள் கொள்ளை
x
தினத்தந்தி 31 July 2021 10:12 PM IST (Updated: 31 July 2021 10:12 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீமுஷ்ணம் அருகே டாஸ்மாக் கடையில் துளையிட்டு ரூ.1 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சேத்தியாத்தோப்பு, 

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டையில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையின் மேற்பார்வையாளராக வலசக்காடு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன்(வயது 52) என்பவர் உள்ளார். 

இந்த நிலையில் இரவு வியாபாரம் முடிந்ததும் மேற்பார்வையாளர் பாலகிருஷ்ணன் மற்றும் விற்பனையாளர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றனர். நேற்று முன்தினம் காலை வந்து பார்த்தபோது, கடையின் பக்கவாட்டு சுவரில், ஒருவர் கடைக்குள் சென்று வரும் வகையில் துளையிடப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், ஷட்டரை திறந்து கடைக்குள் சென்று பார்த்தனர். 

மதுபாட்டில்கள் கொள்ளை 

அதில் கடையில் வைத்திருந்த மதுபாட்டில்கள் அடங்கிய 10 பெட்டிகளை காணவில்லை. நள்ளிரவில் டாஸ்மாக் கடையின் சுவற்றில் துளையிட்டு, அந்த வழியாக மர்மநபர்கள் உள்ளே நுழைந்து மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றிருப்பது தொியவந்தது. கொள்ளை போன மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி, சோழத்தரம் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த கடையை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். 
மேலும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, கடையில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் சோழத்தரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story